தயாரிப்பு – பசங்க புரொடக்ஷன்ஸ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் – பி. மதன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாண்டிராஜ் இசை – யுவன்ஷங்கர் ராஜா பாடல்கள் – நா. முத்துக்குமார், யுகபாரதி ஒளிப்பதிவு – விஜய் படத்தொகுப்பு – அத்தியப்பன் சிவா நடனம் – தினேஷ் கலை – ராஜீவன் கிரியேட்டிவ் புரொடியூசர் – ஆர்.டி. ராஜா இணை தயாரிப்பு – ஜேம்ஸ் மக்கள் தொடர்பு – ஜான்சன் நடிகர்கள் – விமல், சிவ கார்த்திகேயன், ரெஜினா, பிந்து மாதவி, சூரி, டெல்லி கணேஷ், மனோஜ் குமார், சுஜாதா மற்றும் பலர். வெளியான தேதி – 29 மார்ச் 2013.
இன்றைய இளம் ரசிகர்களைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கான படத்தைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
பசங்க, மெரினா படங்களிலிருந்து இது ஒரு மாறுபட்ட படம். ஒரு இயக்குனரை அவருடைய முந்தைய படங்களை வைத்து எப்போதும் ஒப்பிப்ட்டுப் பார்க்கக் கூடாது. ‘பசங்க’ படத்தில் இளம் மாணவர்களின் மனநிலையைப் பற்றி சொன்னவர், ‘மெரினா’ படத்தில் ஒரு சராசரி இளைஞனின் காதலைப் பற்றி சொன்னவர் இந்த படத்தில் இரு நண்பர்களின் நட்பைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
‘தேனி’ கேசவன் (விமல்), ‘பட்டை’ முருகன் (சிவ கார்த்திகேயன்) நெருங்கிய நண்பர்கள், வேலை வெட்டி இல்லாத வெட்டி ஆபீசர்கள். எப்படியாவது கவுன்சிலராகி விட வேண்டும் என்பதுதான் இவர்களது லட்சியம். இவர்களைக் கண்டு இவர்களது குடும்பமே சாபம் விடும் அளவிற்கு நடந்து கொள்பவர்கள். யாரையாவது காதலித்தால் இவர்களது நட்பு பிரிந்து விடும் என்ற காரணத்தால் யாரையுமே காதலிக்காமல் இருக்கிறார்கள்.
ஆனால், சிவ கார்த்திகேயனுக்கு , ரெஜினா மீது காதல் வந்து விடுகிறது. பின்னர், விமலுக்கு பிந்து மாதவி மீது காதல் வந்து விடுகிறது. இவர்களின் காதலுக்கு சில பிரச்சனைகள் வர, அவற்றை எதிர் கொண்டு காதலில் வெற்றி பெற்றார்கள் இல்லையா என்பதை கலகலப்புடன் நகர்த்தி கடைசியில் கண் கலங்க வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ‘கேஸ்டிங்’ என்று சொல்லக் கூடிய கதாபாத்திரங்களுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நட்சத்திரத் தேர்வு. வேறு யாரையுமே அவரவர் கதாபாத்திரங்களில் பொருத்திக் கூடப் பார்க்க முடியவில்லை.
‘பட்டை’ முருகனாக பட்டைய கிளப்பியிருக்காரு சிவ கார்த்திகேயன். அவருக்கே உரிய அந்த எகத்தாளம், கிண்டல், கேலி ரத்தத்தில் ஊறிய ஒன்று போல. ரெஜினாவைப் பார்த்ததும் , அவர் மீது காதலாகி அவரது கடையையே சுற்றிச் சுற்றி வந்து கடைசியில் அவரை தன் காதல் வலையில் வீழ்த்தி விடுகிறார். இப்படி பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னும் கொஞ்ச நாளைக்கு வண்டியை ஓட்டலாம்.
‘தேனி’ கேசவனாக விமல். கொஞ்சம் ‘பசங்க’ விமல் இவருடைய நடிப்பில் அடிக்கடி எட்டிப் பார்க்கிறார். பேச்சில் கொஞ்சம் மாடுலேஷனாவது காட்டினால் நன்றாக இருக்கும். எல்லா வசனத்தையும் ஒரே மாதிரி பேசுகிறார். ஆனாலும், இதையெல்லாம் கவனிக்காத அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது. நடிப்பை விட கதாபாத்திரத்தின் தன்மை இவரை ரசிக்க வைத்து விடுகிறது.
‘பாப்பா’வாக ரெஜினா. ‘கண்ட நாள் முதல்’ படத்திலேயே லைலாவின் தங்கையாக நடித்து கவனத்தை ஈர்த்தவர். இப்போதுதான் ஒரு திருப்புமுனை கிடைத்துள்ளது. அப்படியே ஜெராக்ஸ் கடை பெண்ணாக ஜொலிக்கிறார். ‘குரல்’ கொடுத்தவருக்கும் பாராட்டுக்கள்.
‘மித்ரா’வாக பிந்து மாதவி. ஆஸ்பிட்டலில் டோக்கன் கொடுப்பவர். ஆனால் இவருடைய வீட்டை வசதியான சொந்த வீடாக காட்டுகிறார்கள். ஏன் இந்த சறுக்கல் பாண்டிராஜ் ?. தைரியமான பெண் என்பதற்காக விமலை எகிறி எகிறி அடிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். சரி, காமெடிப் படம் என நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இந்த நால்வர் அணி அதிகமாக ரசிக்க வைத்தாலும் கடைசியாக கிளைமாக்சில் டெல்லி கணேஷும், மனோஜ் குமாரும் ஸ்கோர் செய்து விடுகிறார்கள். நம் பக்கத்தில் படம் பார்த்தவர் அழுதே விட்டார்.
நகைச்சுவை நடிப்பில் சூரி , அழகாக ‘டேக் ஆப்’ ஆகி வருகிறார். மற்றவர்கள் உஷாராவது நலம். அரசியல்வாதி நமோ நாராயணன், சிவ கார்த்திகேயன் அம்மா சுஜாதா , நண்பனான மகேந்திரன் ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘ஒரு பொறம்போக்கு….’, ‘கொஞ்சும் கிளி…’, ‘தெய்வங்கள் எல்லாம்….’ ரசிக்க வைக்கின்றன. படத்தின் பெரும் பகுதி ரயில்வே ஸ்டேஷனில் நடக்கிறது. படப்பிடிப்பு எனத் தெரியாமல் பின்னணியில் அனைத்துமே யதார்த்தமாகத் தெரிகிறது. விஜய் ஒளிப்பதிவும் அருமை. தேர்தல் சம்பந்தமான காட்சிகளில் அத்தியப்பன் சிவாவின் ‘கட்டிங்’ கொஞ்சம் அதிகமா இருந்திருக்கலாம்.
‘தேனி’ மாதிரி சுறுசுறுப்பா இருந்து ‘பட்டை’ய கிளப்பிட்டாரு பாண்டிராஜ்.