தமிழ்நாட்டில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் – முதல்வர் அறிவிப்பு

tamilnadu-cmதமிழக சட்டசபையில், நேற்று விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“வேளாண்வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், இளைய சமுதாயத்தினர் முன்னேற்றம் அடைவதற்கும் முக்கிய காரணியாக விளங்குவது மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னி பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்வதை கருத்தில் கொண்டு, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மீண்டும் மாற்றிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், மின்உற்பத்தியை பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடரமைப்புகளை நிறுவுதல், மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் ஆகிய பணிகளை எனது தலைமையிலான அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

எனது அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்குள் 606.5 மெகாவாட் அளவுக்கான மின் உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, மேட்டூர் அனல்மின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலைய இரண்டாவது நிலையின் முதல் அலகு மற்றும் வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் இரண்டாவது அலகு ஆகிய புதிய மின் உற்பத்தி நிலையங்கள் முழு உற்பத்தி திறனை எட்டும் நிலையில் உள்ளன.

வடசென்னை அனல் மின்திட்டத்தின் அடுத்த அலகு, மே மாதம் முதல் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது. வல்லூர் கூட்டு மின்திட்டத்தின் மூன்றாவது அலகு வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது. தூத்துக்குடி கூட்டு மின்திட்டத்தின் 500 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகள் முறையே வருகின்ற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உற்பத்தியை தொடங்க உள்ளன.

இது மட்டுமல்லாமல், நான் ஏற்கனவே அறிவித்தபடி 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கத்திட்டம் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோரி பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. 2×660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மையத்திட்டம் மற்றும் 2×660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின்திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 2×800 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றால் தான் தமிழகம் தலை சிறந்த மாநிலமாக விளங்க முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு, அதனை எய்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள மின் திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

நீலகிரி மாவட்டத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் மின்திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும். இந்தத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக, குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே, 90.8 மீட்டர் உயரத்திற்கு 2.25 டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட ‘சில்லஹல்லா மேல் நீர்த்தேக்கம்’ நிறுவப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள 5.5 டி.எம்.சி அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி–எமரால்டு நீர்த்தேக்கங்களுடன் இணைக்கப்படும். இதனை இணைப்பதற்காக 2750 மீட்டர் நீளமுடைய சுரங்க நீர்வழித்தடம் டன்னல் அமைக்கப்படும்.

இரண்டாவது கட்டமாக, உத்தேசிக்கப்பட்டுள்ள சில்லஹல்லா நீர்த்தேக்கத்திற்கும், பில்லூர் நீர்தேக்கத்திற்கும் இடையே உள்ள 1,500 மீட்டர் உயரத்தைப்பயன்படுத்தி 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மின் நிலையம் அமைக்கப்படும்.

இந்த மின் நிலையம் நிலத்தடி மின் நிலையமாக, அதாவது அண்டர் கிரவுண்ட் பவர் ஆக அமையும். மின் உற்பத்திக்குப்பின் உபயோகப்படுத்தப்பட்ட நீர், கடைவாயில் சுரங்கம், அதாவது டெய்ல்ரேஸ் டன்னல் வழியாக பில்லூர் நீர்த்தேக்கத்தை அடையும். நிலத்தடி மின் நிலையத்தை அடைய அணுகு சுரங்க வழி, அதாவது அப்ரோச் டன்னல் அமைக்கப்படும். இத்திட்டம் நிறைவு பெற சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது, மின்வினியோகமும் சீராக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பையும், தொடரமைப்பையும் வலுப்படுத்த 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த ஜப்பானிய நிறுவனம் 3,572 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும். இந்த கடன் சிறப்பினமாக கருதப்பட்டு ஆண்டு ஒன்றிற்கு 0.55 சதவீத சலுகை வட்டியைக் கொண்டிருக்கும். மேலும் இந்தக் கடன் தொகையை, கடன் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து 20 ஆண்டுகளில் திரும்பச்செலுத்தலாம். இதன் மூலம் மாநிலத்தின், குறிப்பாக சென்னையின் மின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு சீரான மின் வினியோகம் உறுதிப்படுத்தப்படும்.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி மூலம், 2,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் மற்றும் அதற்குரிய மின்தொடர் பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் புதிய மின் நிலையங்கள் சென்னையில் கிண்டி, கொரட்டூர், மணலி மற்றும் ஒட்டியம்பாக்கத்திலும், கோவையில் காரமடையிலும் அமைக்கப்படும்.

இது மட்டுமல்லாமல், 822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 230 கிலோ வோல்ட் திறன் கொண்ட 14 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தத்துணை மின்நிலையங்கள் சென்னையில் ஆலந்தூர், அம்பத்தூர் மூன்றாவது பிரதான சாலை, சென்னை சென்டிரல், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் மின்சார வாரியத்தலைமை அகம் ஆகிய இடங்களிலும்; திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் கருவலூர்; மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்; அரியலூர் மாவட்டம் பொய்யூர்; திருவண்ணாமலை மாவட்டம் புரிசை; விருதுநகர் மாவட்டம் சவ்வாஷ்புரம்; ஈரோடு மாவட்டம் செண்பகபுதூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.

தென் மாநிலங்களுக்கு இடையே மின் பகிர்மாற்றம் செய்யும் வகையில் வேலூர் மாவட்டம் திருவலத்தில் 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட ஒரு புதிய துணை மின் நிலையம் இந்திய மின் தொடரமைப்பு நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி, பிற மாநிலங்களிலிருந்து அதிக அளவு மின்சாரத்தை பெற ஏதுவாக, திருவலத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமும் அதற்கான மின் தொடர்களும் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும்.

காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளிக்கொணர்ந்து அதனை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்கோ, இந்த வகை மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியாகும் நேரங்களில் உபரி மின்சாரத்தை செலுத்தும் வகையிலோ, தேவையான மின் தொடரமைப்பு இல்லாத காரணத்தால் இந்த மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், மாநிலத்தின் தென் பகுதியில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில்

2,300 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறிலிருந்து சென்னைக்கு 1,488 சுற்று கிலோ மீட்டர் நீளத்திற்கு 400 கிலோ வோல்ட் மின் தொடர்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று, 1,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை, உடுமலைப்பேட்டை மற்றும் தேனி பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வகையில் தேனி மாவட்டத்தில் தப்பகுண்டு, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைக்கடவு மற்றும் ராசிபாளையம் ஆகிய இடங்களில் புதிய 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளும், அவற்றை இணைத்து 788 சுற்று கிலோ மீட்டர் நீளமுடைய 400 கிலோ வோல்ட் மின்தொடர் பாதை அமைக்கும் பணிகளும் தொடங்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், கானார்பட்டியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மற்றுமொரு 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும். இது மட்டுமின்றி, காஞ்சீபுரம் மாவட்டம் ஓமேகா தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு ஆகிய இரண்டு இடங்களில் புதிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும்; சென்னை கோடம்பாக்கம் மற்றும் திருமங்கலம் தெற்கு; திண்டுக்கல் மாவட்டம் ஏழுவானம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி; கோயம்புத்தூர் மாவட்டம் குரு நல்லிபாளையம்; புதுக்கோட்டை மாவட்டம் மழையூர்; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், நாங்குநேரி, மேலக்கல்லூர் மற்றும் பழையபேட்டை;

வேலூர் மாவட்டம் முகுந்த ராயபுரம்; காஞ்சீபுரம் மாவட்டம் ஓமேகா தொழிற்பூங்கா, பெரும்பாக்கம் மற்றும் புதுத்தாங்கல்; கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி; தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம்; ஈரோடு மாவட்டம் தாளவாடி; திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் மற்றும் வேலூர் ஆகிய 19 இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும்; ஈரோடு மாவட்டம் சிமிட்டஹள்ளி; கரூர் மாவட்டம் இ.கருங்கல்பட்டி மற்றும் செல்லிவலசு; தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பை; காஞ்சீபுரம் மாவட்டம் இளையனூர் வேலூர், மேலபுடி மற்றும் இராமாபுரம்; திருநெல்வேலி மாவட்டம் நக்கல முத்தான்பட்டி; பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணம்; திருச்சி மாவட்டம் டி. ஆலை; தருமபுரி மாவட்டம் வி. முத்தாம்பட்டி ஆகிய இடங்களில் 11 புதிய 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும் அமைப்பதற்கான பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும்.

மொத்தத்தில், இந்த ஆண்டு 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட 10 துணை மின் நிலையங்கள், 230 கிலோவோல்ட் திறன் கொண்ட 16 துணை மின் நிலையங்கள்,

110 கிலோ வோல்ட் திறன் கொண்ட 19 துணை மின் நிலையங்கள் மற்றும்

33 கிலோ வோல்ட் திறன் கொண்ட 11 துணை மின் நிலையங்கள் என மொத்தம்

56 துணை மின் நிலையங்கள் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

புதிய மின் உற்பத்தி நிலையங்களை இயக்கி வைத்தல், புதிய மின் திட்டங்களைத் தொடங்குதல் மட்டுமல்லாது, பற்றாக்குறையை 85 சதவீதம் வரை ஈடு செய்யும் வகையில், நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தப் புள்ளிகள், அதாவது கேஸ் ஓன் பிட்டிங் மூலம் மின் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் கட்டமாக வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நீண்ட கால அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தித்துறையை பொறுத்த வரையில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் 7,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன, ” என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

Read Previous

‘மத்தாப்பூ’ இசை வெளியீடு , பாக்யராஜின் ‘குறும்பு’ பேச்சு

Read Next

இன்றைய ரிலீஸ்…