1998ம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று முரளி, சுவலட்சுமி நடித்து வெளியான ‘தினந்தோறும்’ திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்ட ஒரு வித்தியாசமான காதல் படம்.
அப்படத்தை இயக்கிய நாகராஜ் தொடர்ந்து பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வருவார் என அவருடன் இருந்தவர்களும், திரையுலகத்தினரும் பேசிய காலம் அது. ஏனென்றால், கதை சொல்லுவதில் அவ்வளவு அசாத்திய திறமை கொண்டவர் என புகழப்பட்டவர்.
அப்படிப்பட்டவர் ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழித்துதான் அவருடைய இரண்டாவது படத்தை இயக்குகிறார் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். ஆனால் அந்த ஆச்சரியத்தின் பின்னணியில் ஒரு அதிர்ச்சியான விஷயம்தான் உள்ளது. அவ்வப் போது சில படங்களுக்கு வசனம் எழுதினாலும், மதுப் பழக்கத்திற்கு அடிமையாக வாழ்க்கையின் கடைசி கட்டத்திற்கே சென்றவர் மீண்டு வந்து ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்றால் அது பெரிய விஷயம்தான்.
இதையே நேற்றைய இசை விழாவில் கலந்து கொண்ட அவருடைய இயக்குனர் நண்பர்கள் சீரியஸாகப் பேசி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்கள். ஆனால், இயக்குனர் கே. பாக்யராஜ் மட்டுமே கொஞ்சம் வெளிப்படையாகவும், கலகலப்பாகவும் பேசி அவரை வாழ்த்தினார்.
‘அரங்கத்துக்குள்ள உஷ்ணம் அதிகமா இருக்கு. வந்து பேசற மற்ற இயக்குனர்களும் ரொம்ப சீரியஸா பேசினாங்க. சரி, ஏதாச்சும் ரிலீஃப் ஆ இருக்கும்னு பார்த்தால் காம்பயர் பண்ண கூட எந்த பொண்ணும் இல்லை, பிஆர் ஓ நிகிலே வந்து மைக்கை பிடிச்சிட்டாரு. காம்பயர் இருந்தாலாவது ஏதாச்சும் ஜோக்கடிப்பாங்க இல்லை எதையாவது ஜாலியா பேசுவாங்கன்னு பார்த்தால் அதுக்கும் வழி இல்லாம போச்சு.
நல்ல வேளை படத்தோட ஹீரோயின் காயத்ரி வந்து கொஞ்சம் காப்பாத்தினாங்க…அப்பதான் ‘ப்ப்ப்ப்ப்பா’ ன்னு இருந்தது. ஒரு ‘ப்பப்பா’ அரங்கத்துக்குள்ள ஒரு ஹீரோயின் வந்தது. இன்னொரு ‘ப்ப்ப்பா’ உங்க எல்லாருக்கும் தெரியும். (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஹீரோயின் காயத்ரிதான் இந்த படத்துக்கும் ஹீரோயின் , அதான் இரண்டாவது ப்ப்ப்பா ).
இப்பலாம் ஜாதகம் பார்த்துதான் இயக்கிறதுக்கே வாய்ப்பு கொடுக்கிறாங்க. இவருக்கு நேரம் சரியா இருக்கா, ‘ஒன்பதுல குரு’ இருக்கான்னு பார்த்துதான் கொடுக்கறாங்க. இப்படித்தான் நம்ம ஆளு ஒருத்தரு ரஜினிகாந்த் ஜாதகத்தை கொடுத்து ஒருத்தருகிட்ட வாய்ப்பு கேட்டாராம். அந்த அளவு நிலைமை போய்க்கிட்டிருக்கு.
இந்த மாதிரி போய்க்கிட்டிருக்கிற நேரத்துல இந்த படத்தோட இயக்குனர் நாகராஜ் மேல நம்பிக்கை வச்சி இந்த படத்துக்காக பணத்தை போட்ட தயாரிப்பாளருக்கு ரொம்ப நன்றி.
ஒரு தப்புல விழுறது பெருசு இல்ல, ஆனால் அதுல இருந்து எழுந்து வர்றதுதான் பெருசு. அப்படித்தான் நாகராஜ் எழுந்து, வெளிய வந்திருக்காரு, கண்டிப்பா அவர் வெற்றி பெருவாரு,” என்று வாழ்த்தினார்.
கடைசியாக நன்றியுரையில் பேசிய இயக்குனர் நாகராஜ், “ என் ஃபிரண்ட் அடிக்கடி ஒரு கவிதை சொல்வான், “மனிதனாய் பிறந்து விட்டோம், மரங்களாய் வளர்ந்து விட்டோம், சருகாய் போவதற்குள், ஒன்றிரண்டு கனிகளையாவது கொடுத்து விட்டு போவோம்.
மறுபடி நான் இங்க வந்து நிக்கறன்னா, எம் மேல எல்லாரும் என் மேல வச்ச அன்பு மட்டுமே. இதே கோடம்பாக்கத்துல நடந்து போகும் போது, டீக்கடை வாசல்ல நிக்கும் போதும், ஆபீஸ் முன்னாடியும், என்னைத் தெரிஞ்சவங்க, உதவி இயக்குனர்கள், நடிகர்கள், என்னைப் பார்த்து சொல்லும் போது, இவன் நல்லா வந்திருக்கலாம்யா, இப்படி போயிட்டான்யா, இவன் நல்லா வந்திருக்கலாம், நல்லா வந்திருக்கலாம்னு பேசினதே என்ன இப்படி வர வைச்சிருக்கு.
மனசுக்குள்ள துக்கம் வந்தாலும் எதுவும் பேச முடியாது, சந்தோஷம் வந்தாலும் எதுவும் பேச முடியாது. இப்ப என் மனசு நிறைஞ்சிருக்கு, நிறைய பேச முடியலை, எல்லாருக்கும் நன்றி, ” என உணர்வு பூர்வமாகப் பேசினார்.
‘மத்தாப்பூ’ மகிழ்ச்சி எங்கள் மனதில் மட்டுமல்ல உங்கள் மனதிலும் நிறையட்டும் நாகராஜ்.