‘பிரியாணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்தி, மான்டி தக்கார், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தைப் பற்றி பேசும் போது இயக்குனர் வெங்கட் பிரபு, ‘கார்த்தி இந்த படத்தில் ஒரு ‘வுமனைசராக’ நடித்துள்ளார்’ என சொல்லி அதிர்ச்சி அளித்தார்.
ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இப்படத்தைப் பற்றிய பத்திரிகை வெளியீட்டில் கார்த்தி இந்த படத்தில் ‘பிளேபாய்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவலை சொன்னார்கள். அப்படியிருக்க நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு ‘வுமனைசர்’ என்று சொல்லி அதிர்ச்சியளித்தார்.
‘வுமனைசர்’ என்றால் பெண்கள் பின்னால் அலைபவன், பெண் பித்தன், (இன்னும் ஒரு படி மேலே சொன்னால் அசிங்கமாக இருக்கும்…) என்று தமிழ்ப்படுத்துவார்கள்.
‘பிளே பாய்’ என்றால் பெண்களுடன் பார், நைட் கிளப் போன்ற இடங்களில் சுற்றி, வாழ்க்கையை ஜாலியாக அனுபவிப்பன் என்று தமிழ்ப்படுத்துவார்கள்.
இரண்டுக்கும் வித்தியாசம் உள்ள நிலையில் வெங்கட் பிரபு சொன்ன கதாபாத்திரம்தான் ‘பிரியாணி’ படத்தில் கார்த்தியின் கதாபாத்திரமா அல்லது அவர்கள் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் உள்ளபடியான கதாபாத்திரமா என குழப்பம்தான் மிஞ்சுகிறது.
என்ன இருந்தாலும் இயக்குனர் சொல்வதுதான் சரியாக இருக்கும். அப்படிப் பார்த்தால் ‘வுமனைசர்’ என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருப்பது நாம் எதிர்பார்க்காத ஒன்று.
அதனால்தான் படத்திற்கு ‘யுஏ’ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
வெங்கட் பிரபு பேசும் போது கூட, “படத்தில் பார் காட்சிகள், குடிக்கும் காட்சிகள் இருப்பதால் ‘யுஏ’ கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறோம். மற்றபடி படத்தில் ரத்தம் சிந்தும் காட்சிகளோ, வன்முறைக் காட்சிகளோ எதுவுமில்லை,” என்றார்.
அவல் கிடைத்தாலே மெல்பவர்கள் அல்வா கிடைத்தால் விடுவார்களா என்ன ?