தமிழ் சினிமாவில் நடிகர்களையும், பட்டங்களையும் பிரிக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டன.
மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன், சூப்பர் ஸ்டார், கேப்டன், இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், புரட்சித் தமிழன், சுப்ரீம் ஸ்டார், மக்கள் நாயகன், புரட்சித் தளபதி, பவர் ஸ்டார், இன்னும் எவ்வளவோ பட்டங்கள்…ஏதாச்சும் விட்டுப் போச்சுன்னா சொல்லுங்க…
ஆனால், சமீப காலமா அஜித் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அவர்களது பட்டப் பெயர்களை பயன்படுத்துவதில்லை.
கமல்ஹாசன், காதல் இளவரசன் என்பதை போட்டு சில வருடங்களாகி விட்டது. அவர் இப்போது ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.
அதனால்தானோ என்னவோ, அவருடைய பழைய ‘காதல் இளவரசன்’ பட்டத்தை தற்போது பல ஹீரோயின்களின் மனம் கவர்ந்தவராகச் சொல்லப்படும் ஆர்யாவுக்கு கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த ‘ராஜா ராணி’ படத்தின் 100வது நாள் விழாவில் பேசிய கமல்ஹாசன், “நான் பல வருடங்களாக இந்த ‘காதல் இளவரசன்’ பட்டத்தை வைத்திருக்கிறேன். இப்போது, இந்த பட்டத்தை ஆர்யாவுக்கு கொடுக்க விரும்புகிறேன். அவர்தான் இனி அடுத்த ‘காதல் இளவரசன்”, என்றார்.
60களில் ‘காதல் மன்னன்’ என ஜெமினி கணேசன் அழைக்கப்பட்டார், 80களின் தொடக்கத்திலேயே தனது முத்தக் காதல் நடிப்பால் ‘காதல் இளவசரன்’ என அழைக்கப்பட்டவர் கமல்ஹாசன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அந்த படத்திற்குப் பொருத்தமான நடிகராக ஆர்யா கிடைத்திருக்கிறார்.
நல்ல வேளை புதிய பட்டம் எதுவும் கொடுத்திருந்தால் மேலே இரண்டாவது பாராவில் இன்னும் ஒன்று புதிதாக சேர்ந்திருக்கும்.