இந்தக் காலத்தில் ஒரு படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் வாங்குவதென்பது சாதாரண விஷயமல்ல. கிளாமரான காட்சிகள் இல்லாமல், அடிதடி, வெட்டுக் குத்து இல்லாமல் ஒரு படத்தை இயக்கியவது பெரிய விஷயம். அப்படியிருக்க இயக்குனர் வீ.சேகர் தொடர்ந்து 17 படங்களுக்கு ‘யு’ சர்டிபிகேட் வாங்கியிருக்கிறார் என்றால் சாதாரண விஷயமா.
குடும்பக் கதைகள் மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து பெரும்பாலான படங்களில் வெற்றி வாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர். இப்போது அவரது மகன் கார்ல் மார்க்ஸ் நாயகனாக நடிக்கும் ‘சரவணப் பொய்கை’ என்ற படத்தை எடுத்து முடித்து அந்தப் படத்திற்கு குடும்பத்தினருடன் பார்க்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் பெற்றிருக்கிறார்.
“நாம் எல்லோரும் குடும்பதிற்காகத்தான் வாழ்கிறோம். குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறோம். எதிர்கால சிந்தனை கூட குடும்பத்திற்காக மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது, அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என் படங்களை ரசிகர்கள் வெற்றி பெறச் செய்தார்கள்.
இதுவரை குடும்பப் படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதைதான் ‘சரவணப் பொய்கை’. இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் விதமாக இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இதுவரை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக நான் இயக்கிய 17 படங்களுமே ‘U’ சர்டிபிகேட் படங்கள் தான். ‘சரவணப் பொய்கை’ படத்திற்கும் ஒரு கட் கூட இல்லாமல் ‘U’ சர்டிபிகேட் வழங்கியிருக்கிறார்கள்.
கார்ல் மார்க்ஸ், அருந்ததி, விவேக், கருணாஸ், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் நடிக்க காதல், காமெடி படமாக உருவாகி உள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது,” என்றார் இயக்குனர் வீ. சேகர்.