பார்த்திஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பார்த்தி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் ‘விஞ்ஞானி’. இந்தப் படத்தில் அவருடைய ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
தன்னுடைய சிறப்பான நடிப்புத் திறமையால் நன்றாக அறியப்பட்ட மீரா ஜாஸ்மின் தற்போது அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் விஞ்ஞானி. விஞ்ஞானி திரைப்படத்தில் அவருடைய நடிப்பாற்றலை மேலும் சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குனர். பார்த்தி, சினிமாத் துறையில் சாதனை படைக்கும் நோக்கத்தில் தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சித் துறையிலிருந்து விலகி வருகிறார்.
விஞ்ஞானி, ஒரு சைண்டிஃபிக் திரில்லர் வகையிலான திரைப்படம். ஒரு இளம் விஞ்ஞானி தந்திரமாக விரிக்கப்பட்ட திருமண வலையில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவருடைய வாழ்க்கையே மாறிவிடுகிறது. அந்த விஞ்ஞானி உலகின் மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். அப்போது நடைபெறும் அவருடைய திருமணம் அவருடைய குறிக்கோளை எவ்வாறு பாதிக்கிறது…? அது அவரது ஆய்வுக்கு சாதகமா பாதகமா…?! என்பதுதான் படத்தின் பரபரப்பான கதை. ஆக்ஷன், திரில்லர், கிளாமர் மற்றும் காமெடி கலந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
பாடல்கள் வெளிநாடுகளிலும், கண்கவர் ஸ்டுடியோ செட்டிங்களிலும், இந்தியாவின் அழகான பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுக்கூடங்கள் இத் திரைப்படத்தைப் பார்க்கும் மாணவர்களுக்கு பாடமாகவும், பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய வகையிலும் இருக்கும் என்கிறார் இயக்குனர் பார்த்தி.