‘காக்க காக்க’ படத்தின் மூலம் சூர்யாவுகென தனி இமேஜை உருவாக்கிக் கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அதன் பின் அவரது இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படமும் சூர்யாவின் வெற்றிப் பட வரிசையிலும், சிறந்த படங்களின் வரிசையிலும் ஒன்றாக இடம் பெற்றது.
மூன்றாவது முறையாக அவர்களிருவரும் இணைந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பூஜையுடன் நின்று போனது. கதை விவகாரத்தில் இருவருக்கும் இடையே சிக்கல் எழுந்ததால் அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிக் கொண்டார். அதன் பின் கௌதம் மேனன் சிம்பு நடிக்கும் படத்தையும், அஜித் நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார்.
இதனிடையே சூர்யா – கௌதம் மேனன் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்ற சூர்யா விருப்பப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இயக்குனர் கௌதம் மேனன் தரப்பில் அப்படி எந்த வித பேச்சுவார்த்தையும் ஆரம்பமாகவில்லை என்கிறார்கள்.
ஆனாலும், சூர்யா விருப்பப்படும் பட்சத்தில் கௌதம் மேனன் அதற்கு சம்மதித்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றும் சொல்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜுடன் பிரிந்து கௌதம் இணைந்தது போல மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவே சொல்கிறார்கள். அப்படி நடந்தால் ‘துருவ நட்சத்திரம்’ மீண்டும் தூசு தட்டப்படுமா அல்லது புது கதை உருவாகுமா என்பது பின்னர்தான் தெரிய வரும்.
அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை…