ஸ்ரீகாந்த், நீலம் மற்றும் பலர் நடிக்கும் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் அருமை சந்திரன், திரையுலகத்தில் நம்பிக்கை என்பதே இல்லாமல் போய்விட்டது, யாரை நம்புவது என்று தெரியவில்லை என்று பேசி மிகவும் வருத்தப்பட்டார்.
நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ராஜேஷ், சுப்பிரமணிய சிவா, ‘தயா’ செந்தில்குமார், எஸ்.ஜே.சூர்யா, உட்பட பலர் கலந்து கொண்ட பேசினார்கள்.
ஆர்.கே.செல்வமணி பேசும் பொது படத்தின் தயாரிப்பாளர் அருமைசந்திரனுக்கு பதிலளிக்கும் விதமாக சினிமாவைக் கெடுப்பவர்கள் யார் என்று விளக்கமாகப் பேசினார்.
“படங்களைத் தயாரிக்கும் போது என்ன தவறு நடக்குதுன்னா, இதை நான் திரைப்படத் துறைக்கு ஒரு அறிவுரையாவும் சொல்ல விரும்புகிறேன். எனக்கு அவமானமா இருக்கிறதால இதை நான் சொல்றேன்.
புதுசா யாராவது தயாரிப்பாளர்கள் வந்தாங்கன்னா, அப்படியே ஹீரோகிட்ட வர்றாங்க, சார் உங்க சம்பளம் 50 லட்சமா, உங்களுக்கு நான் 50 லட்சம் கொடுத்துடறேன், அதுக்கு மேல நான் எவ்வளவு வேணாலும் வாங்கிப்பேன், நீங்க தலையிடக் கூடாதுன்னு சொல்லிடறாங்க. அவரும் அதுக்கு ஓகேன்னு சொல்லிடறாரு.
அப்புறம் மியூசிக் டைரக்டர்கிட்ட வர்றாங்க, அவர் 25 லட்சம் கேக்கறாரு, அவர் கிட்டயும் அதே மாதிரி நான் மேல எவ்வளவு வேணாலும் பேசி வாங்கிப்பேன்னு சொல்லிடறாங்க. அதுக்கு இவங்களும் ஒத்துக்கறாங்க. அதுக்கப்புறம் படம் தயாரிக்க வந்தவங்களையும் சேர்த்து காலி பண்ணிடறாங்க.
இதை மாதிரி ஏமாத்தறது தாயைக் கற்பழிக்கிறது போலன்னு நீங்க எல்லாரும் நினைச்சிக்கணும். சினிமாத் துறையில மட்டும் யார் தப்பு பண்ணாங்கன்னு சொல்றதேயில்லை. சினிமாக்காரங்க ஏமாத்திட்டாங்கங்கன்னுதான் சொல்றாங்க.
எங்க இயக்குனர்கள் சங்கத்துல இப்படி யாராவது ‘மால் பிராக்டீஸ்’ பண்ணாங்கன்னா, அது நிரூபிக்கப்பட்டால், அவங்களை அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்து கூட நாங்க நீக்கிடுவோம். இந்த மேடையில அதை நான் பகிரங்கமா சொல்ல விருப்பப்படுகிறேன், ” எனப் பேசினார்.
ஏற்வெனவே, ‘கத்தி’ படத்தின் கதை குறித்து பகிரங்கமான விவாதம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஆர்.கே.செல்வமணியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘
அவர் சொன்னது போல மிஞ்சூர் கோபி கதையைத் திருடித்தான் ‘கத்தி’ படம் எடுக்கப்பட்டது என்று நிரூபணமானால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை இயக்குனர்கள் சங்கத்திலிருந்து நீக்கி விடுவார்களா…?