ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் திரையுலகில் படங்களை வெளியிட மிக முக்கியமான விசேஷ நாட்களாக வரும் பொங்கல் திருநாளுக்கு 2015ம் ஆண்டில் எத்தனை படங்கள் வரப் போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
தற்போதைய சூழ்நிலையில் ‘ஐ மற்றும் என்னை அறிந்தால்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே ‘பொங்கல் வெளியீடு’ விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ‘ஐ’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆர்னால்ட் வந்து இசையை வெளியிட்டுச் சென்றதால் உலகம் முழுவதுமே இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. அஜித் நடித்து ஓராண்டு கழித்து வெளிவர உள்ள படம் என்பதால் இப்படத்திற்கும் அவருடைய ரசிகர்கள் வழக்கம் போலவே மிகப் பெரிய ஓபனிங் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படங்களைத் தவிர பொங்கலுக்கு வெளிவர உள்ள படங்கள் என, கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, விஷாலின் ‘ஆம்பள’, தனுஷின் ‘அனேகன்’, மிஷ்கினின் ‘பிசாசு’, கார்த்தியின் ‘கொம்பன்’ என சில படங்களையும் பட்டியலிடுகிறார்கள். இவற்றில் எவையெவெ வெளியாகும் என போகப் போகத்தான் தெரியும்.
டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் ‘லிங்கா’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில் பிரபு சாலமனின் ‘கயல்’, சிம்புவின் ‘வாலு’, விக்ரம் பிரபுவின் ‘வெள்ளைக்கார துரை’ ஆகிய படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி வரிசையாக பல படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ள நிலையில், தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளபடி விசேஷ நாட்களில் மட்டும் பெரிய படங்கள் வெளிவர வேண்டும் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே வெளிவரும் எனத் தெரிகிறது.
இனி வரும் காலங்களில் ஒரே சமயத்தில் பல படங்கள் போட்டி போடுவது தவிர்க்கப்படும் என திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.