ஆர்யா சொன்னது பொய் – விஷால் மறுப்பு…

aambala success meet‘ஆம்பள’ பட இசை வெளியீட்டு விழாவின் போது ஆர்யா கொளுத்திப் போட்ட வெடி ஒன்று பரபரவென்று பற்றிக் கொண்டு தேவையற்ற வம்பை வளர்த்தது.

அப்போது பேசிய ஆர்யா, “விஷால் கிட்ட, என்ன மச்சான் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்றியே, பெரிய பெரிய படங்கள்லாம் வருதுன்னு கேட்டேன், அதுக்கு எவனா இருந்தாலும் வெட்டுவன்னு, விஷால் சொன்னான்,” எனப் பேசினார்.

ஆனால், நேற்று நடந்த ‘ஆம்பள’ படத்தின் வெற்றிச் சந்திப்பின் போது தான் அப்படி சொல்லவேயில்லை என விஷால் மறுத்துப் பேசினார்.

“நான் ‘எவனா இருந்தாலும் வெட்வேன்னு’ சொன்னதா ஆர்யா, ‘ஆம்பள’ படத்தோட இசை விழாவுல பேசினான். ஆனால், நான் அப்படிச் சொல்லவேயில்லை, அது அவனோட கற்பனைப் பேச்சு. இன்னும் சொல்லப் போனால், பொங்கலுக்கு எந்தெந்தப் படம் வருதுன்னு கூட அப்ப எனக்குத் தெரியாது.

இனி, என்னோட படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவையே நடத்தப் போறதில்லை. அப்படியே நடந்தாலும் என் நண்பர்களைக் கூப்பிட மாட்டேன்.

‘ஆம்பள’ படத்தை எப்படியாவது பொங்கலுக்கு கொண்டு வந்துடணும்னு நான், இயக்குனர் சுந்தர் .சி எல்லாருமே உழைச்சோம். ஏன்னா, 2012 பொங்கலுக்கு நாங்க முதன் முறையா இணைஞ்ச படமான ‘மத கஜ ராஜா’ வந்திருக்க வேண்டியது. ஆனால், அந்தப் படம் இன்னும் வரவேயில்லை. அதனால, பொங்கலுக்கு என்ன ஆனாலும் ‘ஆம்பள’ படத்தை வெளியிட்டுடணும் நான் படம் ஆரம்பிக்கும் போதே முடிவு பண்ணிட்டேன்.

அந்தப் படம் வராதது ஒரு நடிகரா எனக்கு ரொம்பவே வருத்தம். இனி மேலாவது இந்த வெற்றியைப் பார்த்து அந்த படத்தோட தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார்னா பரவாயில்லை. இப்ப மட்டுமில்லை, இன்னும் பத்து வருஷம் கழிச்சி வந்தாக் கூட ‘மத கஜ ராஜா’ வெற்றிப் படமா அமையும்,” என விஷால் பேசினார்.

‘ஆம்பள’ படத்தின் வெற்றிச் சந்திப்பில் இயக்குனர் சுந்தர் .சி, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், வசனகர்த்தா ராதாகிருஷ்ணன், எடிட்டர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஷோபி, நடிகர்கள் வைபவ், சதீஷ், அபிஷேக், கௌதம், ஸ்ரீமன், விச்சு, நடிகை ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read Previous

கே.ஜே. யேசுதாஸ் – சங்கீதச் சக்கரவர்த்தி…

Read Next

‘தல’ ரசிகர்களுக்கு நன்றி – விக்னேஷ் சிவன்