வேலைக்காரன் – விமர்சனம்

ஒரு தனிப்பட்ட பெண்ணின் பிரச்சனையைச் சொன்னதால் கொண்டாடப்பட்ட படம் ‘அருவி’. ஆனால், இங்குள்ள அனைவருக்குமான பிரச்சனையைச் சொல்லும் படமான ‘வேலைக்காரன்’ படத்தையும் ‘அருவி’க்கும் அதிகமாகவே கொண்டடலாம்.

விளம்பரம், மார்க்கெட்டிங், விற்பனை இதுதான் பல நுகர்வோர்களை தங்கள் பக்கம் இழுக்கும் கம்பெனிகளின் தாரக மந்திரம். 8 மணி நேரம் வேலை செய்யும் வேலைக்காரன் கூட 16  மணி நேரம் ஒரு நுகர்வோர் ஆகத்தான் இருக்கிறான் என்பதைத்தான் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்த ‘வேலைக்காரன்’.

‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் தன் பக்கம் தமிழ் சினிமாவையும், தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

நுகர்வோர்கள், வேலைக்காரர்கள், முதலாளிகள், முதலாளிகளுக்காக எதையும் செய்யத் துணியும் கூலிப் படையினர் ஆகியோருக்கு இடையிலான போராட்டம்தான் ‘வேலைக்காரன்’. ஒரு விமர்சனத்திற்குள் இந்தப் படத்தை அடக்கிவிட முடியாது. இந்தப் படத்தைக் கொண்டாட முடியாதவர்கள் கூட முதலாளித்துவ எண்ணம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

வீட்டு வேலை செய்யும் அம்மா ரோகிணி, வெல்டிங் வேலை செய்யும் அப்பா சார்லி, படிக்கும் தங்கை ஆகியோருடன் சராசரி மிடில் கிளாஸ் பிரிவிற்கும் கீழ் இருப்பவர் சிவகார்த்திகேயன்.  கொலைகார குப்பத்தில் வசிக்கும் அவரால் அப்பகுதி ரவுடியான பிரகாஷ்ராஜை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அதனால், பிரபல கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்கிறார். அங்கு அவருக்கு அதிகாரியாக இருக்கும் பகத் பாசில் மூலம் வேலையைக் கற்றுக் கொள்கிறார். அந்த கம்பெனியில் பிரகாஷ்ராஜிடம் வேலைக்கு இருந்த விஜய் வசந்த்தை வேலைக்குச் சேர்க்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால், திடீரென விஜய் வசந்த்தைக் கொலை செய்கிறார் பிரகாஷ்ராஜ். அப்போது அவர் பிரகாஷ்ராஜைக் கொலை செய்யச் சொன்னது அவருடைய கம்பெனி முதலாளிதான் என்பது சிவகார்த்திகேயனுக்குத் தெரிய வருகிறது. அவர்களது கம்பெனி உணவுப் பொருட்களைச் சாப்பிட்டதால் தன் மகனை இழக்கும் சினேகா, வழக்கில் வெற்றி பெற ஒரு விபரீத முயற்சியில் இறங்குகிறார். அது பற்றித் தெரிய வரும் சிவகார்த்திகேயன், சினேகாவிற்கு ஆதரவாக அவர்களது கம்பெனியை எதிர்த்தே போராட்டத்தில் இறங்குகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா, சினேகாவிற்கு நீதி கிடைத்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நாயகனாக பத்து படங்களை மட்டுமே முடித்துள்ள நிலையில், இப்படி ஒரு கருத்துள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததற்கு அவரை முதலில் பாராட்ட வேண்டும். வேறு எந்த ஒரு நாயகனாவது இப்படிப்பட்ட துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பார்களா என்பது சந்தேகம்தான். அறிவு கதாபாத்திரத்தில் அறிவார்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். வேலைக்காரன், மூளைக்காரனாக இருந்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும். பல கோடிகளுக்கு அதிபதிகளான முதலாளிகளையே மிரள வைக்கிறார். அழுத்தமான வசனங்களைத் தெளிவாகப் பேசி நடித்து பல காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் முக்கியமான படங்களில் ஒன்றாக அமையும்.

யதார்த்த நடிப்பால் மலையாள ரசிகர்களை மிரள வைத்த பகத் பாசில், தமிழிலும் அப்படி ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். முதலாளித்துவம் ரத்தத்தில் ஊறிப் போனவர்களால்தான் மற்ற முதலாளிகளையும் அவர்களது வழிக்குக் கொண்டு வர முடியும். பகத் பாசிலைப் பார்த்தால் அந்தக் கம்பெனி முதலாளியின் மகனாகவேதான் தெரிகிறார். தமிழ் சினிமா இயக்குனர்கள் இனி பகத் பாசிலையும் விடமாட்டார்கள்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா. இருவருக்கும் இடையில் காதல் காட்சிகள் அதிகமில்லை. ஓரிரு டூயட் பாடல்கள் மட்டும்தான். இவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்.

சிவகார்த்திகேயனின் நண்பர்களாக விஜய் வசந்த், ரோபோ சங்கர். விஜய் வசந்த், சில காட்சிகளில் மட்டும் வந்து கண்ணீர் விட வைக்கிறார். ஆர்.ஜே. பாலாஜிக்கு அதிக வேலையில்லை. சதீஷ் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் அம்மா ரோகிணி, அப்பா சார்லி நிறைவான நடிப்பு. சென்டிமென்ட் நடிப்பில் நம்மை சிறை பிடிக்கிறார் சினேகா.

அனிருத் இசையில், ‘கருத்தவன்லாம் கலீஜாம்…., இதயனே…’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ராம்ஜியின் ஒளிப்பதிவும், முத்துராஜின் அரங்க அமைப்பும் படத்திற்கு தூணாக அமைந்துள்ளன.

படத்தில் உள்ள டீடெய்லிங் மற்ற விவரங்கள் பற்றிய விளக்கங்கள் படத்திற்கு பலத்தைக் கொடுக்கின்றன. இயக்குனருடன், உதவி இயக்குனர்களும், வசனகர்த்தாவும் கூடுதலாக உழைத்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே கதை ‘டேக்-ஆப்’ ஆகி விடுகிறது. கிளைமாக்ஸ் வரை நம்மை அப்படி இப்படி அகல விடாமல் படம் பல கருத்துக்களுடன் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்குப் பின் ரிலாக்ஸ் செய்யக் கூட நேரமில்லாமல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எடுத்துக் கொண்ட கதைக்காகவும், சொல்லப்பட்ட கருத்துக்காகவும், உணவுப் பொருட்கள் மீது மக்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்காகவும் எடுக்கப்பட்ட இந்த ‘வேலைக்காரன்’-ஐ, நம் ‘சொந்தக்காரன்’ ஆகக் கொண்டாடலாம்.

Read Previous

அருவி இயக்குனர், கதாநாயகிக்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசு

Read Next

குழந்தைகளை குதூகலப்படுத்த வரும் ‘சங்கு சக்கரம்’

Most Popular