தயாரிப்பு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – அவ்னி சினி மேக்ஸ் ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர் இயக்கம் – சுந்தர் .சி பாடல்கள் – பா. விஜய் ஒளிப்பதிவு – கோபி அமர்நாத் படத்தொகுப்பு – கே.எல். ஸ்ரீகாந்த் – என்.பி. ஸ்ரீகாந்த் வசனம் – நலன் குமாரசாமி – ஸ்ரீனு கலை – குருராஜ் மக்கள் தொடர்பு – ஜான்சன் வெளியான தேதி – 14 ஜுன் 2013
—
காதல் பார்த்த உடனே பத்திக்கிறதா இருந்தாலும் சில நேரம் அதுக்கு தீயா வேலை செஞ்சால்தான் கை கூடும்னு சொல்ற படம்.
சுந்தர் . சி இயக்கியிருக்கிற படமா இதுன்னு ஆச்சரியப்பட வச்சிருக்கு. இந்த டிரென்டுக்கும் தன்னால படம் கொடுக்க முடியும்னு நிரூபிச்சிருக்காரு.
ஏறக்குறைய 18 வருஷமா இயக்குனரா படத்துக்குப் படம் வித்தியாசமான காமெடி படங்களை கொடுக்கிறது சாதாரண விஷயமில்லை. காமெடி படம் எடுக்கிறதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. இத்தனை வருஷமா, ரசிகர்களோட எண்ண ஓட்டங்களை புரிஞ்சிக்கிட்டு, காலத்துக்கு தகுந்த மாதிரியும் ‘அப்டேட்’ பண்ணிக்கிட்டு இருக்கிறதாலதான் சுந்தர் .சி இந்த வெற்றிகரமான நகைச்சுவை படத்தைக் கொடுத்து நம்மை ரசிக்க வைக்கிறாரு.
பரம்பரை பரம்பரையா காதல் திருமணம் பண்ண குடும்பத்து வீட்டுப் பிள்ளை சித்தார்த். காதல் திருமணம் பண்ணிக்கிட்ட இரண்டு அக்கா, மாமாக்கள், தங்கை ஒருத்தர் இப்படி கலகலப்பான இன்றைய தலைமுறை குடும்பமா இருக்காங்க.
சின்ன வயசுல இருந்தே பெண்கள்னா பிடிக்காத, அவங்களால ஏதோ ஒரு விதத்துல பாதிக்கப்பட்ட சித்தார்த்துக்கு இளைஞனானதும் எல்லாரையும் மாதிரி காதல் வருது. ஆனால், அதுவும் தோல்வில முடிஞ்சிடுது.
படிப்புலாம் முடிஞ்சி ஒரு ஐ.டி. கம்பெனில வேலைக்கு சேர்ற சித்தார்த் ஒரு ‘அட்ராக்டிவ்’ இளைஞனா இல்லாம கொஞ்சம் அப்பாவியான , அம்மாஞ்சியான இளைஞனா இருக்காரு. அதே கம்பெனில வேலைக்கு சேர்ற ஹன்சிகாவைப் பார்த்ததும் காதலிக்கிறாரு. ஆனால் , அவர் கிட்ட போய் காதலை சொல்ல தைரியம் வரலை. இதனால, அவங்க மாமா யோசனைப்படி காதலிக்கிறவங்களுக்கு ஐடியா கொடுக்கறதயே ஒரு வேலையா பார்க்கிற சந்தானம் கிட்ட போய் அடிக்கடி ஐடியா கேட்டு ஹன்சிகாவை அட்ராக்ட் பண்ண நினைக்கிறாரு.
ஆனால், அவங்க ஆபீஸ்லயே அழகான , எல்லாரையும் கவர்ந்த கணேஷ் வெங்கட்ராமன், ஹன்சிகாகிட்ட காதலை சொல்லி இரண்டு பேரும் காதலர்களா ஆகறாங்க. இதுக்கப்புறமா சித்தார்த் – ஹன்சிகா காதல் என்னாகுது, ‘லவ் குரு’வா இருக்கிற சந்தானம் கரெக்டா ஐடியா கொடுத்து ‘கரெக்ட்’ பண்ணா வச்சாரா இல்லையான்கறதுதான் படத்தோட மீதி கதை.
டைட்டிலுக்கும், கேரக்டருக்கும் பொருத்தமா ஆர்யா, ஜீவா மாதிரியான ஹீரோக்கள் நம்ம ஞாபகத்துக்கு வந்தாலும் ஐ.டி. பையன் லுக்ல, அதுவும் அந்த அப்பாவி, அம்மாஞ்சி, அமைதியான லுக்ல சித்தார்த் ரொம்பவே பொருந்திப் போறாரு. இந்த காலத்துல காதலிக்கத் தயங்கற கேரக்டர் இருப்பாங்களான்னு கொஞ்சம் யோசிச்சாலும், அநியாயத்துக்கு அப்பாவியா நடிக்கிறாரு சித்தார்த். ஆனால், ஹன்சிகாவைப் பார்க்கும் போதெல்லாம் ‘ஆயிரம் வாட்ஸ்’ பல்பு மாதிரி பிரகாசிக்கிறாரு. (அதுக்காக சும்மாச்சுக்கும் சமந்தா மாதிரி ஒரு அழகியப் பார்த்தாலும் சும்மா இருப்பாருங்கற மாதிரி கதை சொல்ற சீன்லாம் கொஞ்சம் ஓவர்தாங்கோ…)
அழகான அப்சரஸ் ஹன்சிகா. இவங்க எக்ஸ்பிரஷனுக்கு சரியான பொருத்தமான குரல் கொடுத்தவங்களுக்கு முதல்ல நன்றி. ஓகே ஓகேவுலயம் அதுதான் ரொம்ப பொருத்தமா இருந்தது. வர்ற ஒவ்வொரு காட்சியிலயுமே ஹன்சிகா அவ்ளோ அழகு. அதான் மொத்த ஆபீஸே அவங்க பின்னாடி அலையுது. ஆனால், இவங்க எல்லாரையும் கணேஷும், சித்தார்த்தும் மாத்தி மாத்தி ஓவர் டேக் பண்றாங்க. இந்த ஐ.டி. பேக் டிராப் ரொம்ப பிரஷ்ஷா இருக்கு..
‘லவ் குரு’ சந்தானம். ஹீரோவுக்கு காதல் வருதுன்னாலே இப்படி யாராவது ஒரு காமெடியன்தான் ஐடியா கொடுப்பாங்க…ஆனால், இந்த ஐடியாவுக்கெல்லாம் ‘கிரெடிட் கார்டு’ தேய்ச்சி வசூல் பண்ற கேரக்டர் ரொம்ப புதுசு. கிரெடிட் கார்டு தேய்ச்சி தேய்ச்சி காமெடில பயங்கர வசூல் அள்ள காரணமா இருக்காரு சந்தானம்.
ஆறடிக்கும் மேல ஆனானுபாகுவா, எல்லாரையும் ஜஸ்ட் லைக் தட் வலைல விழ வைக்கிற அளவுக்கு கணேஷ் வெங்கட்ராமன். கொஞ்சம் சறுக்கியிருந்தாலும் வில்லனா மாறக்கூடிய கதாபாத்திரம், ஆனால் இதை கூட காமெடியா சொல்லியிருக்கிறது சுந்தர்.சி ஸ்டைல்.
‘வீட்டோட மாப்பிள்ளை’ பாஸ்கி, பிரண்டா இருந்தே தங்கச்சிய கரெக்ட் பண்ற ஆர்ஜே பாலாஜி, அக்கா தேவதர்ஷினி, ஹன்சிகா அப்பா சித்ரா லட்சுமணன், ஒரே சீன்ல வந்தாலும் கலக்கிட்டுப் போற டெல்லி கணேஷ், ஆபீஸ் எதுனாலும் எஸ்எம்ஸ் தட்டி விடற ஜார்ஜ், எச்ஆர் ரித்திகா , ஹன்சிகா பிரண்டா வர்ற வித்யுலேகா, ஜெனிஃபர் எல்லா கேரக்டர்ஸும் அட்டகாசம்.
சத்யா இசையில அழகென்றால்…., லவ்வுக்கு யெஸ்…., திருட்டுப் பசங்க பாடல்கள் ரசிக்க வச்சிருக்கு.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு ஐ.டி. ஆபீஸ், ஜப்பான், வீடு, ஹாஸ்டல், எல்லாத்துலயும் அழகை அள்ளிக் கொட்டியிருக்கு. பிரவீன் – ஸ்ரீகாந்த் எடிட்டிங் புது ஸ்டைல்ல இருக்கு…
நலன் குமாரசாமி (சூது கவ்வும் இயக்குனர்) – ஸ்ரீனு வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய ஹைலைட்…
தீயா வேலை செய்யணும் குமாரு – காதல்னா சும்மா இல்ல…காமெடின்னா சும்மா இல்ல…‘கரென்ட் ட்ரென்ட் கலக்கல்’