தயாரிப்பு – திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் – சி.வி. குமார் வெளியீடு – ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ. ஞானவேல் ராஜா எழுத்து , இயக்கம் – நலன் குமரசாமி இசை – சந்தோஷ் நாராயணன் பாடல்கள் – ஆர்ஆர், கணேஷ்குமார் பி., ஆதி, முத்தமிழ், கானா பாலா, நலன் குமரசாமி ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன் கதை – நலன் குமரசாமி, ஸ்ரீனிவாஸ் கவிநயம் படத்தொகுப்பு – லியோ ஜான்பால் நடனம் – வி. ஷெரிஃப் சண்டைப் பயிற்சி – ‘பில்லா’ ஜெகன் கலை – விஜய் ஆதிநாதன் மக்கள் தொடர்பு – நிகில் முருகன் வெளியான தேதி – 1 மே 2013
தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறை (Story Telling) முறை மாறி வருகிறது என்பதற்கு இந்த படம் சரியான உதாரணம். கதை என்று பார்த்தால் நான்கு வரிகளுக்குள் அடக்கி விடலாம், ஆனால் அதை திரைக்கதை வடிவமாக சொல்லியிருப்பதில் உள்ள புதுமை அனைவரையும் கவர்ந்து விட்டது.
அறிமுக இயக்குனர் நலன் குமரசாமி முதல் படத்திலேயே கவனிக்க வைத்து விட்டார். ‘பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கார்த்திக் சுப்புராஜ் வரிசையில் ‘சூது கவ்வும்’ நலன் குமரசாமியும் இடம் பெற்று விட்டார். மூன்று படங்களிலுமே விஜய் சேதுபதிதான் நாயகன் என்பது ஆச்சரியமான ஒற்றுமை.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு பயணிக்க வைத்துள்ள இவர்களின் அடுத்த படங்கள் எப்படி அமையப் போகிறது என்பதை ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகினரும் கூட ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
விஜய் சேதுபதி சின்னச் சின்ன கடத்தல் வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பவர். இவருடன் நண்பர்களான கருணாகரன், சிம்ஹா, ரமேஷ் ஆகியோர் புதிதாக இணைகிறார்கள். அமைச்சர் எம்.எஸ். பாஸ்கரின் மகனான அசோக் செல்வனைக் கடத்த திட்டமிட, அந்த கடத்தலில் அசோக்கே அவராக சேர்ந்து கொள்ள, இதன் பின் இந்த ‘கடத்தல் நாடகம்’ எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் படத்தின் கதை.
விஜய் சேதுபதி அவருக்கான கதாபாத்திரத்தை எப்படி தேர்வு செய்து நடிக்கிறார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். இந்த காலத்தில் பெரிய பெரிய நடிகர்களே தடுமாறும் போது, வளர்ந்து வரும் இவர் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுப்பது சாதாரண விஷயமில்லை. ‘எல்லாம் நேரம்ங்க’ என சினிமா பாணியில் சொல்பவர்களுக்கு முன் இந்த தொடர் வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
சஞ்சிதா ஷெட்டி படத்தின் இளமையான பெண் இவர் என்பதால் இவரை நாயகி என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆனால் கிளைமாக்சுக்கு முன்னால் மட்டுமே ஒரு நாயகி போல் பாடலுக்கு நடனமாடுகிறார். ஆனால் வழக்கமான நாயகிக்கு உள்ளது போன்ற கதாபாத்திரப் படைப்பு இவருக்கு இல்லை. எந்நேரமும் விஜய் சேதுபதியின் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு , அவரை லவ்வுகிறார். விஜய்யின் நினைப்பில் சஞ்சிதா ஒரு கற்பனையான கதாபாத்திரம்…
நயன்தாராவுக்கு கோயில் கட்டி ஊரிலிருந்து வெளியேறி ‘வாழ வைக்கும் சென்னை’க்கு வரும் சிம்ஹா அமைதியாக இருந்து சீரியஸாகப் பேசி சிரிக்க வைக்கிறார். அவசர அவசரமா கிளம்பி, ஆபிசுக்குத்தான் போறாரோன்னு நினைச்சா காலையிலயே எழுந்து ‘தண்ணி’ அடிக்கிற கருணாகரன். ஆபீஸ்ல பெண்களால ‘போட்டுக்’ கொடுக்கப்பட்டு வேலையே வேண்டாம்னு வர் ரமேஷ், இவங்க மூணு பேரும் விஜய் சேதுபதி கூட சேர்ந்த பிறகு படம் செம கலகலப்பா போகுது.
அமைச்சர் எம்.எஸ். பாஸ்கர், முதலமைச்சர் ராதாரவி இவர்களின் கதாபாத்திரங்கள் சரியான அரசியல் நகைச்சுவை.
வில்லனா…வில்லன்லாம் சொல்லக் கூடாது, ஆனால் ஹீரோவை எதிர்க்கிறவரு இன்ஸ்பெக்டரா இருந்தாலும், நம்ம சினிமால வில்லன்தான. அப்படி ஒரு இன்ஸ்பெக்டர் பிரம்மாவா,வீர வசனம்லாம் பேசமா , அட…ஒரு வார்த்தை கூட பேசாமலேயே அசத்தியிருக்காரு யோக் ஜெப்பி.
விஜய் சேதுபதி அண்ணனா ‘டாக்டரா’நடிச்சிருக்கற தாஸ், அமைச்சர் மனைவி சுமதியா நடிச்சிருக்கிற ராதா, இவங்களும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கேரக்டர்ல நடிச்சிருக்காங்க.
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘காசு ….பணம்..துட்டு..மணி..மணி…’ வெளியில் வந்த பின்னும் முணுமுணுக்க வைக்கிறது…நேர்த்தியான ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் அளித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் படம் நகரும் வேகத்தில் தொய்வு ஏற்பட்டாலும் கடைசியில் சரி செய்து விடுகிறார்கள்.
‘சூது கவ்வும்’ – ஆல் ரெடி வெற்றியை கவ்வியாச்சி…