தயாரிப்பு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – ரோனி ஸ்குரூவாலா, சித்தார்த் ராய் கபூர்
இயக்கம் – ஆர். கண்ணன்
இசை – தமன்
ஒளிப்பதிவு – பி.ஜி. முத்தையா
படத்தொகுப்பு – லியோ ஜான்பால்
சண்டைப் பயிற்சி – ஸ்டன்ட் சில்வா
வசனம் – ஜான் மகேந்திரன்
திரைக்கதை – கோ. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன், ஆர். கண்ணன்
நடனம் – கல்யாண், தினேஷ்
மக்கள் தொடர்பு – நிகில்
நடிப்பு – ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி, நாசர் மற்றும் பலர்.
ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘டெல்லி பெல்லி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். ஆனால், இந்த கதையை (?) தமிழில் தயாரித்தால் வெற்றி பெறும் என்று எப்படி நினைத்தார்களோ தெரியவில்லை.
காதல், நட்பு, காமெடி, எல்லாம் இருக்கும் படம்தான், ஆனால் எதுவுமே முழுமையாக அமையவில்லை. படத்தில் கதை நடப்பதாகக் காட்டும் ‘மும்பை ’ பின்னணி எதற்கு என்று தெரியவில்லை. அதனால் படத்திற்கு எந்த விதமான பிளஸ்பாயின்ட்டும் இல்லை.
கதை, கதைன்னு எழுதுகிறோமே அப்படி என்ன கதை இருக்கிறது என்று கேட்கிறீர்களா. சரி, சொல்லி விடுகிறோம். ஆனால் அது கதையா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி ஒரே பத்திரிகையில் வேலை பார்ப்பவர்கள். ஆர்யாவின் காதலியான ஹன்சிகா மூலமாக இவர்களுக்கு எதிர்பாராமல் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் கிடைக்கின்றன. அதை வைத்து வசதியாக வாழ நினைக்கிறார்கள். ஆனால் அந்த வைரத்துக்கு சொந்தக்காரரான நாசருக்கு இவர்களிடம்தான் வைரம் இருக்கிறது என தெரிந்து விடுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
1970களில் நம்ம ஊர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களில் பார்த்த அதே மாதியான கதை (?)தான். சில மாதங்களுக்கு முன்பு ஆர்யாவின் தம்பி சத்யா நடித்து வெளிவந்த ‘புத்தகம்’ என்ற படத்தின் கதையும் இதேதான். ஆனால் , வைரங்களுக்குப் பதிலாக அந்த படத்தில் ரூபாய் நோட்டுகள் இருக்கும். தம்பிக்கும் சேர்த்து நீங்கதானே கதை கேட்டிருப்பீங்க ஆர்யா. என்னமோ போங்க ?.
நன்றாக வளர்ந்து வரும் வேளையில் இப்படி எல்லம் கதை கேட்டீங்கன்னா எப்படி ஆர்யா ? பார்த்து சூதானமா இருந்துக்குங்க. மத்தபடி ஒரு ஹீரோயின் இருந்தாலே உங்க நடிப்பைப் பத்தி சொல்ல வேண்டாம். இரு ஹீரோயின்கள் இந்த படத்துல…ஆனாலும் என்ன எதுவுமே பத்தலையே பாஸ் ?
சந்தானம் இந்த படத்திற்கு ‘நகைச்சுவைப் பகுதி’ வசனம் வேறு எழுதியிருக்கிறார். அடுத்தவர்களின் தோற்றக் குறைகளைப் பற்றி கமென்ட் அடிப்பதுதான் நகைச்சுவை என்று நீங்கள் தொடர்ந்தால் நம்ம ரசிகர்களே சாரி, சொல்லிடுவாங்க சந்தானம். பல படங்கள்ல நகைச்சுவை ‘சந்தனத்தை’ பூச வச்ச நீங்க, இந்த படத்துல வேற எதையோ பூசி ‘நாற்றம்’ அடிக்க வச்சிட்டீங்க. (ஹிந்தில இருந்ததுன்னு சொல்லி, தப்பிக்க வேண்டாம், நமக்கு ஏத்தபடி மாற்றியிருக்கலாமே).
பிரேம்ஜியும் படத்துல இருக்காரு, அவ்வளவுதான்.
ஹன்சிகா, ஏர் – ஹோஸ்டஸ். ரொம்ப வசதியா இருந்தும், பறக்கற த்ரில்லுக்காக வேலை செய்யறாங்களாம். கார், வீடுலாம் கொடுத்து ஆர்யாவை அவங்க அப்பா வளைக்கிறது 1980 ஸ்டைல். எல்லாத்தையும் வாங்கி அனுபவிச்சிட்டு , கடைசியில ஆர்யா , இவங்களை ‘கழட்டி’ விட்டுடறாரு…
அஞ்சலி, இங்கிலீஷ் பேப்பர் ரிப்போர்ட்டர். கொஞ்சம் மாடர்ன் டிரஸ், கொஞ்சம் இங்கிலீஷ் பேச வச்சி , இவங்க கேரக்டரை மும்பை பெண்ணா காட்ட டிரை பண்ணியிருக்காங்க. ஆனாலும், அவங்க முகம் , நான் மதுரைப் பொண்ணுதான்னு சொல்லுது. அது எப்படி ஆர்யா கூட ஒரு நாள் பழக ஆரம்பிச்சதும் காதலிக்க ஆரம்பிச்சிடறாங்கன்னு தெரியலை…
நாசர், ஷாயாஜி ஷிண்டே, சித்ரா லட்சுமணன் மற்ற நடிகர்கள் வரிசையில் மட்டுமே.
கதையே ரீமேக் கதை, திரைக்கதையை மூன்று பேர் அமைத்திருக்கிறார்கள். ஜான் மகேந்திரனின் வசனம் எங்கும் கைதட்டலை வாங்கித் தரவில்லை. நான்கு சுவற்றுக்குள் ஒரு ‘நாடகம்’ பார்த்த எஃபெக்டே அதிகமாக இருக்கிறது.
தமன் இசையில் ‘அகலாதே அகலாதே…’, ‘அர்ஜுனா அர்ஜுனா…’ ரசிக்க வைக்கின்றன.
‘சேட்டை’ – இப்படி ‘கோட்டை’ விட்டுட்டீங்களே….
