திரைப்படத் தயாரிப்பு என்பது டிஜிட்டல் மயமான பிறகு பலரும் இயக்குனர்களாக மாறும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. முன்பெல்லாம் ஃபிலிமில் படமாக்கப்பட்ட போது ரீ-டேக், ரீ-டேக் என எடுத்தால் தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்டுப் போக வேண்டியதுதான். ஆனால், டிஜிட்டல் வந்த பிறகு யார் வேண்டுமானாலும் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி விடலாம் என்பது ஒரு பக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆரோக்கியமில்லாமலும் இருக்கிறது. பல நல்ல கதையம்சங்களைக் கொண்ட படங்களைப் பலரும் தயாரிக்க முன் வருகிறார்கள். அப்படி ஒரு நல்ல கதையுடன் கொண்ட படமாகத்தான் இந்த ‘சாலையோரம்’ அமைந்துள்ளது. இதுவரை தமிழில் யாருமே தொடதா துப்புரத் தொழிலாளர்களைப் பற்றிய கதை என்பது பாராட்ட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அதைத் திரைக்கதை அமைத்த விதத்திலும் , நாயகியின் தேர்வு விதத்திலும் இயக்குனர் கொஞ்சம் ஏமாற்றி விட்டார். ராஜ், அனாதையாக இருந்தாலும் முத்துக்காளையால் வளர்க்கப்பட்டவர். மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றுகிறார். அவருக்கும் குப்பைகளைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஷெரினாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. டாக்டர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்யும் ஒரு பெண்ணை, ஒரு துப்புரவுத் தொழிலாளி காதலிக்க முடியுமா, அப்படியே காதலித்தாலும் அவர்கள் இணைய முடியுமா என்பதுதான் இந்தப் படத்தின் கதை. நாயகன் ராஜ், துப்புரத் தொழிலாளியாக இயல்பாகவே நடித்திருக்கிறார். ஆனால், பேச்சில் மட்டும் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது. நாயகியாக ஷெரினா, நாயகிக்குரிய பெரிதான தோற்றம் இல்லை, இருந்தாலும் தன் கதாபாத்திரத்தில் முடிந்தவரை நடித்திருக்கிறார். சிங்கம் புலியின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. தொழிலாளர்களின் இன்னொரு பக்கத்தைக் காட்டிய விதம் மட்டுமே பாராட்டும் அம்சமாக படத்தில் உள்ளது.