தயாரிப்பு – தின்க் பிக் ஸ்டுடியோஸ் இயக்கம் – விஜய் இசை – ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பு – நாசர், பேபி சாரா, லுத்புதீன் பாஷா, துவாரா, விசாலாட்சி மற்றும் பலர்.
காரைக்குடி செட்டிநாட்டுப் பகுதியின் மண் மனம் மாறாத ஒரு பெரிய குடும்பத்தின் வாழ்வியலை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய். ஏதோ, படம் பார்த்தோம் என்ற உணர்வு இல்லாமல் நாமும் அந்த வீட்டில் ஒருவரை இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒரு சிறுமி, ஆசையாக வளர்த்த சேவலின் மீது வைத்துள்ள பாசம்தான் படத்தின் கதை. அந்த சிறுமியால் மொத்த குடும்பமும் எப்படி சைவத்திற்கு மாறுகிறார்கள் என்பதை யதார்த்தமாகச் சொல்லும் படம் இது.
கதை கோட்டையூர் கிராமத்தில் மனைவி, மூன்றாவது மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் அமைதியாக வாழ்ந்து வருபவர் நாசர். ஊர்த் திருவிழாவுக்காக அவருடைய முதல் இரண்டு மகன்கள், பேரன்கள், மகள், பேத்தி அனைவரும் வருகிறார்கள். குடும்ப நலனுக்காக கோயிலுக்கு சேவலை நேர்த்திக் கடன் செய்வதை நிறைவேற்ற நாசர் முடிவெடுக்கிறார். அதன் பின் சேவல் திடீரென காணாமல் போகிறது. அதன் பின் சேவல் கிடைத்ததா, அந்த குடும்பத்தின் நேர்த்திக் கடன் நிறைவேறியதா, சைவத்திற்கும் அந்த சேவலுக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் படத்தின் கதை.
செட்டிநாட்டின் அழகான வீடு, அருமையான குடும்பம், சினிமாவுக்கு பரிச்சயமில்லாத நடிகர்கள், நாசர், பேபி சாரா, லுத்புதீன் பாஷா, துவாரா ஆகியோரின் இயல்பான நடிப்பு இவை அனைத்தும் படத்திற்கு பிளஸ் பாயின்ட். ஒரு கானா பாட்டு, டாஸ்மாக் பாட்டு, அரைகுறை ஆடை நடிகைகள், ஆபாசமான வசனம், இப்படி எதுவுமில்லாமல் 2014ம் ஆண்டில் இப்படியும் ஒரு படமா என ஆச்சரியப்பட வைக்கும் படம்.
சேவலை பலி கொடுக்கப் போகிறார்களே என நமக்கு எந்த பதற்றமும் ஏற்படவேயில்லை. சில காட்சிகளில் சேவலை ‘கோழி’ என்றெல்லாம் சொல்கிறார்கள். பேபி சாராவுக்கும், சேவலுக்கும் இடையிலான பாசத்தை ஆரம்பத்தில் நன்றாக பதிய வைத்திருக்கலாம். பேபி சாராவுக்காக அனைவரும் திடீரென மனம் மாறுவது நம்பும்படி இல்லை.
சைவம் – தலை வாழை இலை போட்டாச்சு, முழு விருந்து படைத்திருக்கலாமே…