சாஹோ – விமர்சனம்

கதை

மிக புத்திசாலி திருடனான பிரபாஸ், அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனி போலீஸ் படைக்குள் நுழைந்து தன்னை போலீஸ் அதிகாரி என நம்ப வைத்து, நீல் நிதின் முகேஷ்தான் திருடன்  என போலீசை நம்ப வைக்கிறார். உலகின் முக்கியமான கேங்ஸ்டர்களின் பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் லாக்கரைத் திறக்க உதவும் பிளாக் பாக்ஸ் ஒன்றை திருடவே பிரபாஸ் அப்படி நாடகமாடுகிறார். அதை எடுத்த பின் அவர் வெளிநாட்டிற்குத் தப்பிவிடுகிறார். அனைத்து உண்மையும் தெரிந்து போலீஸ் அவரைப் பிடிக்க திட்டம் போடுகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்துள்ள படம். படத்தில் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், அந்த மேன், இந்த மேன் என பல ஹாலிவுட் படங்களில் பார்த்த சூப்பர் ஹீரோக்களை அவர் ஒருவராகவே இந்தப் படத்தில் காட்டுகிறார். கிளைமாக்ஸில் பறந்து பறந்து, நிஜமாகவே ஒரு கருவி மூலம் பறந்து சண்டை போடுகிறார். லாஜிக்கையெல்லாம் பார்க்கவில்லை என்றால் பிரபாஸையும் படத்தையும் ரசிக்கலாம். நாயகி ஷ்ரத்தா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கும் பிரபாஸுக்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாகவே இருக்கிறது. நாயகனுக்கு உரிய கதையில் நாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். வில்லன்களில் சுன்கி பாண்டே, அருண் விஜய் இருவருக்கு மட்டுமே அதிக வாய்ப்பு. ஹேக்கர் ஆக இருந்து பிரபாஸுக்கு உதவும் கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா.

இசை, மற்றவை

சங்கர் எஷான் லாய், தனிஷ்க் பாக்சி, குரு ரந்தவா, பாட்ஷா என ஆறு பேர் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மதி, ஆக்ஷன் இயக்குனர்கள் கென்னி பேட்ஸ், பெங் ஷான்ங், பாப் பிரௌன், ஸ்டன்ட் சில்வா, ராம் லட்சுமண், திலீப் சுப்பராயன் ஆகியோர் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் இந்தப் படத்தைக் காப்பாற்றுபவர்கள்.

+

ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், விஷுவல் எபெக்ட்ஸ், படத்தின் பிரம்மாண்டம்.

அழுத்தமான கதை இல்லை, எமோஷனலான காட்சிகள் இல்லை, ஆரம்பத்தில் வரும் நீளமான சண்டைக் காட்சி.

Read Previous

சிக்சர் – விமர்சனம்

Read Next

சிக்சர் – இந்த வார நம்பர் 1 படம்