எவ்வளவு நாளாச்சி…இப்படி ஒரு படத்தை அனுபவிச்சி பார்த்து, காட்சிக்குக் காட்சி ரசிக்க வச்சிருக்காங்க..அடடா… குறும் படம் இயக்குனவங்கள்லாம் டைரக்டர் ஆனாலும், எத்தனை பேர் மனசைத் தொடற மாதிரி படத்தைக் கொடுத்திருக்காங்க…அறிமுக இயக்குனர் அருண்குமார் ரொம்ப ரசனையான ஆளு போல… பேப்பர்ல இருக்கிறத காட்சிப்படுத்தியிருக்கிற அழகு இருக்கே…ஆஹா..அருமை..அமர்க்களம்னு சொல்ல வைக்குது. நீங்க மட்டும் படத்தைக் காதலிச்சிக் கொடுக்காம படத்துல நடிச்சிருக்கிற எல்லாரையுமே அவங்கவங்க கேரக்டரை காதலிக்க வச்சிட்டீங்களே…வாழ்த்துகள்…உங்களை மாதிரி ரசனையானவங்கள்லாம் நல்லா வரணுங்க… அந்த ஊருக்கு பண்ணையாரு ஜெயப்பிரகாஷ். ஊர் மக்களுக்கு உதவி செய்யற குணம் கொண்டவரு. ஒரு நாள் நண்பர் வீட்டுக்கு போகும் போது அங்க இருக்கிற ‘பத்மினி’ காரைப் பார்த்ததும் அவருக்கு அது மேல இனம் புரியாத ஈர்ப்பு. ஒரு சந்தர்ப்பத்துல ஊருக்கு போறதால் அந்த காரை ஜெயப்பிரகாஷை வச்சிக்கச் சொல்லிட்டு போறாரு நண்பர். அந்த காருக்கு டிரைவரா வந்து சேர்றாரு விஜய் சேதுபதி. ஊர்ல இருக்கிற நல்லது கெட்டதுக்கு முதல் கொண்டு எல்லாத்துக்குமே அந்த கார் பயன்படுது. அதை ஒரு பையன் மாதிரி பார்த்துக்கறாரு ஜெயப்பிரகாஷ். விஜய்சேதுபதிக்கும் அந்த கார் மேல அவ்வளவு பாசம். அப்பப்ப அவரோட காதலி கூட ஊரையும் சுத்துவாரு. ஆனால், ஜெயப்பிரகாஷ் மனைவியான துளசி அந்த கார்ல மட்டும் ஏறவே மாட்டாங்க. எப்ப புருஷன் ஜெயப்பிரகாஷ், அவரே அந்த காரை ஓட்டறாரோ அப்பதான் அந்த கார்ல ஏறுவன்னு சொல்றாங்க. விஜய் சேதுபதி கிட்ட கார் ஓட்ட கத்துக்காறரு ஜெயப்பிரகாஷ். அவங்க கல்யாண நாளன்னிக்கு அவரே கார் ஓட்டி மனைவி துளசியை உட்கார வச்சி போகணும்னு ஆசைப்படறாரு. இதனிடையில அப்பா வீட்டுக்கு அடிக்கடி வந்து எந்த பொருளையாவது தூக்கிட்டு போற குணம் கொண்ட அவர் மகள் நீலிமா, ஒரு நாள் சண்டை போட்டு காரை எடுத்துக்கிட்டு போயிடறாங்க. கார் இல்லாம அந்த குடும்பமே தவிச்சிப் போயிடுது…கல்யாண நாளன்னிக்கு கார் போகணும்கற ஜெயப்பிரகாஷ் – துளசி ஆசையை நிறைவேத்த துடிக்கிறாரு விஜய் சேதுபதி…அப்புறம் என்ன ஆச்சிங்கறதுதான் படத்தோட கதை. விஜய் சேதுபதிகிட்ட ஒரே ஒரு கேள்வி…எப்படிங்க இதை மாதிரி வித்தியாசமான கதையெல்லாம் தேர்வு செய்யறீங்க…டிரைவர் முருகேசன் கேரக்டராவே மாறிட்டீங்களே பாஸ்…சாதாரண டிரஸ்ல இருந்து, தோள்ல போட்டிருக்கிற அந்த துண்டை கிராமத்துல இருக்கிறவங்க எப்படி பயன்படுத்துவாங்கன்றது முதல் கொண்டு அச்சு அசலா அப்படியே பண்றீங்களே… எங்க கார் ஓட்டைக் கத்துக்கிட்டு ஜெயப்பிரகாஷ் தன்னை அனுப்பிடுவாரோன்னு சந்தேகப்படறதுல ஆகட்டும், காதலி ஐஸ்வர்யா கிட்ட காட்டற பொய்க் கோபமாகட்டும், ஜெயப்பிரகாஷ் – துளசி இரண்டு பேரும் ஒரே ஆசையை மனசுல வச்சிக்கிட்டு இவர்கிட்ட சொல்லும் போது அதை கேட்டு தவிக்கிறதாகட்டும், கார் நம்மை விட்டு போயிடுச்சேன்னு பரிதவிக்கிறதாகட்டும், மினி பஸ் காரன் கிட்ட ஒரு கெத்து காட்டறதாகட்டும்…யப்பா…இந்த அவார்டு கொடுக்கிறவங்கள்லாம் இந்த படத்தைத் தவறாம பாருங்கப்பா… படத்துல பண்ணையாரா வர்ற ஜெயப்பிரகாஷை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுனுலாம் சொல்லக் கூடாது. அவர் ரெண்டாவது ஹீரோதான். அதுலயும் மனைவி மேல இருக்கிற பாசத்துலயும், அவர் வெளிப்படுத்தற காதல்லயும் நமக்கு என்னமோ இன்னொரு ‘கமல்ஹாசன்’ மாதிரிதான் தெரியறாரு. ஒரு 30 வருஷம் முன்னாடி சினிமாவுல அறிமுகமாகி இருந்தால், எங்கேயோ போயிருப்பார் போல. காரை முதன் முதலா பார்த்ததுல இருந்து அதைப் பத்தியே பேசறதுல ஆரம்பிக்கிற அவரோ ‘கார் காதல்’ கடைசில அந்த காரை ஓட்டற வரைக்கும் அப்படியே இருக்கு. அதுவும் வீட்டுல ஒரு காட்சில அந்த காரைப் பார்த்து துள்ளிக் குதிச்சி ஓடி வருவார் பாருங்க…சே…சூப்பர் சார்…. அவருக்கும், மனைவி துளசிக்குமான அந்த ‘பாச மழை’ காட்சிகள் ‘பச்சக்’னு மனசுல ஒட்டிக்குது. அந்த வயசுலயும் இப்படிலாம் காதலிக்க முடியுமான்னு நிஜமாவே ஏங்க வைக்குது. ‘சங்கராபரணம்’ படத்துல சின்ன பையனா நடிச்ச துளசியை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு. என்னமா நடிக்கிறாங்க…கார் மேல இருக்கிற பாசத்தை , விஜய்சேதுபதி கிட்ட வெளிப்படுத்துறதுலயும், மகள் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போறாளேங்கற வெறுப்பையும் அட்டகாசமா காட்டறாங்க. வீட்டுல வேலை செய்யறவங்களைக் கூட வந்து சாப்பிடுப்பான்னு சொல்றது இருக்கே….ஊர்ல நம்ம அம்மாக்களும், பெரியம்மாக்களும், சித்திகளும் பேசற மாதிரியே இருக்கு…‘சரண்யா’க்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது, அடுத்து அம்சமான அம்மா ரெடி… விஜய் சேதுபதி காதலியா ஐஸ்வர்யா, அவர் மனம் கவர்ந்த அழகான கிராமத்துப் பொன்னு. அதிகமான காதல் காட்சிகள் இல்லன்னாலும் யதார்த்தமான நடிப்பு. ‘பீடை’ என்கிற ‘பெருச்சாளி’ என்கிற பாலசரவணன், படத்தோட நகைச்சுவைக்கு பொறுப்பாளர். அவர் வாய் வச்சாலே அவ்வளவுதான். அவங்களுக்கு கண்டிப்பா ஏதாவது நடந்துடும், இதுக்கு முன்னாடி படங்கள்ல கொஞ்சம் ஓவரா நடிச்சவரு, இந்த படத்துல அளவா நடிச்சிருக்காரு. இதான் கரெக்டான ரூட், அப்படியே பிடிச்சிக்குங்க… ஒரே காட்சியில் வந்தாலும் சினேகா, சினேகாதான். மற்றும் மகாதேவன், நீலிமா அவங்கவங்க கேரக்டர்ல அசத்தியிருக்காங்க. ‘அட்டகத்தி’ தினேஷ் தான் படத்தை ஆரம்பிச்சியும் வைக்கிறாரு, முடிச்சும் வைக்கிறாரு…கடைசியா அவரும் அந்த ‘பத்மினி’ கார்ல ஏறி போற சந்தோஷம் நமக்கும் தொத்திக்குது. யாருப்பா அந்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ‘ஜஸ்ட் – இன் பிரபாகரனா தெரியலையே…அதாங்க…முதல் படமா இதுன்னு நம்ப முடியலையே…“எனக்காக பொறந்தாயே…’, ‘பேசுறேன்..பேசுறேன்…’ பாடல்களில் இளையராஜாவின் இசையைக் கேட்டது போன்ற ஒரு இனிமை…பின்னணி இசையிலயும் அசத்தியிருக்காரு. பொதுவா காமிராமேன்லாம் நடிக்கிறவங்களதான் அழகா காட்டுவாங்க, ஆனால், இந்த படத்துல பத்மினி காரையும் விதவிதமா அழகா காட்டியிருக்காரு ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய். காரையே அப்படி காட்டியிருக்கார்னா, மத்தவங்களை இன்னும் சிறப்பாதான காட்டுவாரு. ஒரு சில சினிமாத்தனமான காட்சிகள் இருந்தாலும், ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு படத்தைப் பார்த்துட்டு ரொம்பல நேரம் சிலாகிச்சிப் பேசின படம் இது. நல்ல படத்தை பார்க்கணும்னு நினைக்கிறவங்க மறக்காமப் பாருங்க. ‘பண்ணையாரும் பத்மினியும்’ – பரவசம்… [starlist][/starlist][starlist][/starlist][starlist][/starlist][starlist][/starlist]