‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் நாயகனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் சிறந்த இயக்குனரையும், சிறந்த கதையையும் தேர்ந்தெடுத்த உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்த படங்களில் அந்த கவனத்தை தவற விட்டுவிட்டாரோ என்று யோசிக்க வைக்கிறது. முதல் படத்தில் இருந்த ஒரு இனிமையான சுவாரசியமான காதலும், கலப்பான அம்மா பாசமும், நான் ஸ்டாப் காமெடியும், இனிமையான பாடல்களும் அவருக்கு அறிமுகப் படத்தை மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டாவது படமான ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் அந்த கலகலப்பும் சுவாரசியமும் குறைவாக இருந்தது. பாடல்களும் ஓரளவிற்குத்தான் ஹிட்டாக அமைந்தது. இந்தப் படத்தை விட மூன்றாவது படமாக வெளிவந்துள்ள ‘நண்பேன்டா’ படத்தில் ஒரு மெச்சூரிட்டியான திரைக்கதையும், இயக்கமும் இல்லாமல் போயிருப்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றத்தைத் தரும். இயக்குனர் தேர்விலும், கதைத் தேர்விலும், காட்சிகள் அமைப்பிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டார் இயக்குனர் ஜெகதீஷ். கலகலப்பாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின், அழகான நயன்தாரா, நகைச்சுவையில் இளைய தலைமுறையினரை கவர்ந்த சந்தானம் இப்படி ஒரு அருமையான கூட்டணியில் கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தியிருக்க வேண்டும். எந்தக் காட்சியும் ஒரு புதுமையாகவோ, திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாகவோ இல்லையே…ஏன் ?. தனது சொந்த ஊரான தஞ்சாவூரை விட்டு நண்பன் சந்தானம் வேலை பார்க்கும் ஊரான திருச்சிக்கு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். வந்த இடத்தில் அம்மா பார்த்த ஜோசியப்படி நயன்தாராவைச் சந்திக்க நேரிட, அவர் மீது காதல் கொள்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக நயன்தாரா மனதிலும் இடம் பிடிக்கிறார். ஆனால், நயன்தாரா, தான் ஜெயிலுக்கு சென்று வந்தவர் என்று சொன்னதுமே அதிர்ச்சியடையாமல், அதற்காக நயன்தாராவைக் கிண்டல் செய்கிறார். அதனால் நயன்தாரா, உதயநிதியிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் ஏன் கிண்டல் செய்தார், நயன்தாரா ஏன் ஜெயிலுக்குச் சென்று வந்தார் ? , இவர்களின் காதல் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். உதயநிதியிடம் அதே போல் வழக்கமான டெம்ப்ளேட் நடிப்பு. நயன்தாராவைப் பார்த்த்தும் காதல் கொள்வதும், அவரைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதும், நண்பன் சந்தானத்தைக் கலாய்ப்பதும் என ஒரு சராசரி இளைஞன் என்ன செய்வாரோ அதையெல்லாம் செய்கிறார். நடனத்திலும், சண்டைக் காட்சியிலும் முந்தைய படங்களை விட இன்னும் அதிகமான பெயரை வாங்கி விடுகிறார். லைட்டான கதாபாத்திரங்களில் நடிப்பதை விடுத்து, இன்னும் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிப்பதை முயற்சிக்கலாம். நயன்தாரா, இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் எல்லாம் அவருக்கு ‘லட்டு’ சாப்பிடுவது போல. பேங்கில் வேலை பார்க்கும் கதாபாத்திரம். வழக்கம் போலவே நாயகனைப் பார்த்ததும் முதலில் வேண்டா வெறுப்பாகப் பழகுவதும், அப்புறம் காதலில் விழுவதுமான கதாபாத்திரம். அவர் எதற்காக ஜெயிலுக்குச் சென்றார் என்பதை சீரியசாகச் சொல்வார்கள் என்று பார்த்தால் அதிலும் எதிர்பாராத ‘நகைச்சுவையான டிவிஸ்ட்’ஐ வைத்திருக்கிறார்கள். சந்தானம், படம் முழுவதும் வந்தாலும், முழுவதுமாக சிரிக்க வைக்கவில்லை. தவணை முறையில்தான் சிரிக்க வைக்கிறார். ‘ஓகே ஓகே’ பார்த்தாவை மட்டும் ஞாபகப்படுத்தவில்லை, அவருடைய பல முந்தைய படங்களை ஞாபகப்படுத்துகிறார். புதுசா ஏதாச்சும் டிரை பண்ணுங்க பாஸ். மற்ற நட்சத்திரங்களில் கருணாகரன், சாயாஜி ஷிண்டே, ராஜேந்திரன், சில காட்சிகளில் வருகிறார்கள். சந்தானம் ஜோடியாக ‘துள்ளுவதோ இளமை’ ஷெரீன்…‘ஷெரீனா..அது..’ என்று ஆச்சரியப்பட வைக்கிறார். நயன்தாரா தோழியாக நடித்திருக்கும் பூஜா கவனிக்க வைக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘நீ சன்னோ…, எனை மறுபடி.., தேனே தேனே…’ ஆகியவற்றைக் கேட்கலாம். இருந்தாலும் எங்கேயோ கேட்ட ஞாபகத்தைத் தவிர்க்க முடியவில்லை. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு வழக்கம் போல பளிச். ‘நண்பேன்டா’ – நம்பிக்கையை காப்பாற்றாத இயக்குனர்.