மோ – விமர்சனம்

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு பேய்ப் படம் அல்ல இந்த ‘மோ’, மலைக்க வைக்கும் பேய்ப் படம்.

பேய்ப் படங்களில் பயப்பட வைக்கும் பேய்ப் படங்களுடன் நகைச்சுவை கலந்த பேய்ப் படங்களும் வருகின்றன. இந்தப் படம் அந்த இரண்டும் கலந்த சுவாரசியமான படம்.

சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், டர்புகா சிவா, ராமதாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர், வீடுகளில் பேய் இருப்பதாக நாடகமாடி, பின்னர் அவர்களே அந்தப் பேயை விரட்டுவதாகச் சொல்லி பணம் பிடுங்குபவர்கள். இப்படி ஒரு பெரிய ஃபிளாட்டில் பேயை ஓட்டி நாடகமாடி அடுத்த திட்டத்திற்குப் பிளான் போடுகிறார்கள். அப்போது அந்த ஃபிளாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான செல்வாவிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.

செல்வாவிற்கு பாண்டிச்சேரி பக்கத்தில் ஒரு பழைய பள்ளி ஒன்றை வாங்கி அங்கு ரிசார்ட் கட்ட வேண்டும் என்று ஆசை. அந்த இடத்திற்குப் போட்டி போடும் மற்றொரு ரியல் எஸ்டேட் அதிபரான மைம் கோபி பேய்களை நம்புபவர். அதனால், அந்த பள்ளியில் பேய் இருப்பதாகச் சொல்லி நாடகமாட சுரேஷ் ரவியையும் அவருடைய ஆட்களையும் அனுப்புகிறார். அங்கு செல்லும் அவர்கள் பேய் இருப்பதாக நாடகமாடி மைம் கோபியை ஓட வைக்கிறார்கள். ஆனால், அங்கு உண்மையிலேயே பேய் இருக்க, அந்தப் பேய் ஐஸ்வர்யா ராஜேஷ் உடம்பில் புகுந்து கொள்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், டர்புகா சிவா, ராமதாஸ் ஆகியோர்தான் இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். மாறி மாறி நம்மை சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கிடைக்கும் ‘கேப்’பில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்கிறார்கள். அனைவருக்குமே இந்தப் படம் குறிப்பிடும்படியான படமாக அமையும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இது மாதிரியான சிறிய படங்களில் நடிக்க சம்மதிப்பதற்கே அவருக்குத் தனியாக பாராட்டுக்களைச் சொல்ல வேண்டும். பேய் மேக்கப் போட்டு பயமுறுத்துவதை விட உண்மையிலேயே அவர் மீது பேய் வந்த பிறகு அதிகமாக பயமுறுத்துகிறார்.

புவன் ஆர் நல்லன் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். அவருக்கு ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் இருவரும் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.

குறைந்த செலவில் ஒரு நிறைவான படம்தான் இந்த ‘மோ’.

Read Previous

Taramani’s sexy second teaser

Read Next

Rajini impressed with Baashha

Most Popular