தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களைக் கொடுப்பதற்கென்று மிகவும் குறைவான இயக்குனர்களே இருக்கிறார்கள்.
நகைச்சுவை வசனம் எழுதி நம்மை சிரிக்க வைப்பவர்களும் குறைவுதான். நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் அனைவருமே சிரிக்க வைப்பதில்லை.
நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் படங்களும் நம்மை சோதனைக்குள்ளாக்கும் படங்களாகவே இருக்கும்.
ஆனால், ‘மரகத நாணயம்’ மேலே சொன்ன குறைகளை தீர்த்து வைக்கும் ஒரு படமாக அமைந்திருக்கிறது.
தன் முதல் படத்திலேயே நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான, சுவாரசியமான ஒரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஏஆர்கே சரவன்.
ஊரில் தனக்கு இருக்கும் கடன்களை அடைப்பதற்காக சென்னையில் உள்ள நண்பன் டேனியுடன் சேர்ந்து சிறு சிறு கடத்தல் வேலைகளைச் செய்கிறார் ஆதி. தன்னுடைய கடன்களை அடைப்பதற்காக பெரிய அளவில் எதையாவது செய்தால்தான் சமாளிக்க முடியும் என நினைக்கிறார். அப்படி அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போது ‘மரகத நாணயம்’ ஒன்றைக் கண்டு பிடித்து எடுத்து வரும் வேலை கிடைக்கிறது.
ஆதியும், டேனியும் அதைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு சாமியார் உதவியை நாடுகிறார்கள். அவரின் ஆலோசனைப்படி அந்த மரகத நாணயத்தை எடுக்க முயன்று உயிர் விட்ட 132 பேரில் ஒருவரது ஆவியைத் துணைக்கு அழைக்கிறார்கள். அந்த ஆவியால் மேலும் மூன்று ஆவிகளும் துணைக்கு வருகின்றன. ஆதி, டேனி, நான்கு ஆவிகளான நிக்கி கல்ரானி, முனீஷ்காந்த், அருண்ராஜா காமராஜா, சங்கிலி முருகன் ஆகியோர் மரகத நாணயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அதன் பின் நடக்கும் சம்பவங்கள்தான் உங்களை கடைசி வரை ரசிக்க வைக்கும் ‘மரகத நாணயம்’.
ஆதி, தமிழ்ப் படங்களில் அடிக்கடி நடிக்கவில்லை என்றாலும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் ரசிக்க வைக்கும் படங்களாக அமைந்து விடுகின்றன. இந்தப் படத்தில் ஹீரோயிசமான வேலைகள் என்று அதிகமில்லை. இருந்தாலும் நண்பன் டேனியுடன் சேர்ந்து நகைச்சுவையிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.
படத்தின் நாயகி என்று நிக்கி கல்ரானியைச் சொன்னாலும் அவர் ஆதிக்கு ஜோடி இல்லை. அப்புறம் அவர் யார் என்பதுதான் படத்தில் உள்ள மற்றொரு சுவாரசியம். தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதில்லை என தாராளமாகச் சொல்லலாம். இதில் இயக்குனரின் கற்பனையும், அதற்கு நிக்கி கல்ரானியின் நடிப்பும், உடல் மொழியும் சிறப்போ சிறப்பு. ‘ஆவி’ நடிப்புல ஸ்ட்ராங்கா நிக்கறீங்க…நிக்கி…
படம் முழுவதுமே முனீஷ் காந்தும், டேனியும் இருக்கிறார்கள். இருவரது நடிப்புக்குமே அவர்களது குரல் தனிச் சிறப்பு. ‘முண்டாசுப்பட்டி’ படத்திற்குப் பிறகு முனீஷ்காந்துக்கு இந்தப் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். டேனி, தமிழ் சினிமாவில் அடுத்த நகைச்சுவை நடிகராக அழுத்தமாக அடியெடுத்து வைக்கிறார்.
முனீஷ்காந்த், டேனி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் காணாமல் போய்விடுகிறார். பிணமாகவே நடிக்கும் சங்கிலி முருகன் கூட ஒரு கட்டத்தில் சிரிக்க வைத்துவிடுகிறார்.
ஆனந்தராஜ் அன்ட் கோ நிகழ்த்தும் காமெடி கலாட்டாக்கள் படத்தின் மற்றொரு ஹைலைட். அதிலும் அவர் உதவியாளர் முருகானந்தம் ‘முட்டாள் முருகானந்தமாக’ முத்திரை பதிக்கிறார்.
திபு நைனன் தாமஸ் இசையில் பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவும், ராகுலின் அரங்க அமைப்பும் பாராட்டுக்குரியவை.
ஜுன் மாதத்தில் பள்ளி பரபரப்பெல்லாம் முடிந்திருக்கும். குடும்பத்துடன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வேண்டுமென்றால் ‘மரகத நாணயம்’ போய்ப் பாருங்கள். குழந்தைகளும் கொண்டாடுவார்கள்.