ஏழைக் குடும்பம், குடும்ப கஷ்டம், நோயாளி அம்மா, சுமாராக சம்பாதிக்கும் அப்பா, கல்லூரியில் படிக்கும் தங்கை, கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் மூத்த மகள் என தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருக்கும் ‘டெம்ப்ளேட்’ கதாபாத்திரங்கள்.
ஒரு பெண்ணே போதைப் பொருளைக் கடத்துவது மட்டுமே தமிழ் சினிமாவுக்குப் புதியது. ‘அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை’ மாதிரியான படங்களைப் பார்த்த தமிழ் சினிமா பாதையில் இந்த ‘கோலமாவு கோகிலா’ கண்டிப்பாக திருப்புமுனை அல்ல கோணல் தான்.
‘தமிழ்ப் படம் 3’ வந்தால் இந்தப் படத்தைக் கிண்டலடித்து பல காட்சிகளை தாராளமாக வைத்துவிடலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தாங்கள் செய்வதையே கடைசி வரை அப்படியே செய்து கொண்டிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் நெல்சன், முன்னணி நாயகியான நயன்தாரா அவருடைய படத்திற்கு கதாநாயகி என்றதும் மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் நயன்தாராவை முழுமையாக முன்னிறுத்தி காட்சிகளை அமைத்துவிட்டார்.
கேன்சர் நோயாளியான அம்மாவைக் காப்பாற்ற பணம் தேவைப்படுகிறது. அதற்காக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் மகள் நயன்தாரா, ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து வெளியேற பெரிய கடத்தல் ஒன்றில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. போலீசும் துரத்த அந்தக் கடத்தலை நயன்தாரா வெற்றிகரமாக செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
கல்யாண வயதில் இருக்கும் நயன்தாரா படம் முழுவதும் பாவாடை, சட்டையிலேயே இருக்கிறார். இந்தக் காலத்தில் எந்த ஒரு முதிர்கன்னி இப்படி ஆடை அணிகிறார் என்று தெரியவில்லை. எல்லா காட்சியிலும் ஒரே மாதிரியான முகபாவத்துடன், ஒரே மாதிரியான குரலில் பேசுகிறார் நயன்தாரா. அடிக்கடி ‘கோலமாவு கோகிலா’வை பார்க்கிறோமா அல்லது ‘நானும் ரௌடிதான்’ காதம்பரியைப் பார்க்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. ‘அறம்’ படத்தில் கம்பீர கலெக்டராகப் பார்த்து வியந்த நயன்தாராவா இது ?. விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியதுதான், அதற்காக போதைப் பொருள் கடத்தல்காரி என்பதெல்லாம் நயன்தாராவுக்கு செட் ஆகவில்லையே ?.
படத்தின் நாயகன் யோகி பாபு தான். நயன்தாராவை ஒருதலையாய் காதலிக்கும் கதாபாத்திரம். அவரின் காதலை வெளிப்படுத்த ஒரு பாடல். இதுவரை அவர் நடித்த படங்களில் இந்த அளவிற்கு முக்கியத்துவத்தை யாரும் கொடுத்ததில்லை. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ‘கோகிலா’வை விட ஸ்கோர் செய்திருக்கிறார் யோகி பாபு.
நோயாளி அம்மா சரண்யா, கொஞ்சம் ஓவர் ஆக்டிங். செக்யுரிட்டி அப்பா ஆர்.எஸ். சிவாஜி இயல்பான ஆக்டிங். தங்கை ஜாக்குலின் கிளைமாக்சில் ஜாக்பாட் அடிக்கிறார்.
வில்லன் கோஷ்டியில் உள்ளவர்களில் அனைவருமே இயல்பான முகங்களாக அவரவர் கதாபாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள். அதிலும், டோனி ஆக நடித்திருக்கும் ரெடின் அடிக்கடி சிரிக்க வைக்கிறார். இயக்குனர் விஜய் டிவியில் பணியாற்றியவர் என்பதால் விஜய் டிவி நட்சத்திரங்கள் பலர் சிலபல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையில் ‘கல்யாண வயசுதான்…’ பாடல் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டது. மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகத்தில் கூட இல்லை.
படத்தின் கதாபாத்திரங்கள்தான் ‘டெம்பிளேட்’ ஆக இருக்கிறதென்று பார்த்தால் கிளைமாக்சையும் அப்படியே வைத்திருக்கிறார் இயக்குனர்.
கோ கோ – GO என்று சொல்லும் அளவிற்கு இல்லை.