கடுகு – விமர்சனம்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறதென்றால் அதில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் நாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகத்தான் இருக்கும்.

சில படங்கள் மட்டுமே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக வெளிவரும். ‘கதையின் நாயகர்கள்’ என சில படங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டு எழுதலாம்.

அப்படி எழுதக் கூடிய படமாகத்தான் ‘கடுகு’ படம் வெளிவந்துள்ளது.

‘திருமதி தமிழ்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவையே கலங்கடித்த ராஜகுமாரன் என்ற நாயகரை மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க வைக்க அசாத்திய தைரியம் வேண்டும். அப்படி ஒரு தைரியம் கொண்ட இயக்குனராக விஜய் மில்டன் விளங்குகிறார் என்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஊரில் இருக்கும் பலம் வாய்ந்த ஒருவனை, மிக மிகச் சாதாரண மனிதன் ஒருவன் எதிர்க்கும் கதைதான் இந்த ‘கடுகு’.

தரங்கம்பாடி ஊருக்கு இன்ஸ்பெக்டராக வரும் ஏ.வெங்கடேஷுடன் எடுபிடி வேலைக்காக வருபவர் ராஜகுமாரன். புலி வேஷம் கட்டி ஆடும் கலைஞரான ராஜகுமாரன் மிகவும் எளிய மனிதராக இருந்தாலும், அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர். அந்த ஊரில் அவருக்குப் பழக்கமாகும் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அவருக்குத் தெரிய வருகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் அந்த ஊரின் முக்கியப் புள்ளியான பரத்தைப் பழி வாங்கத் துடிக்கிறார். அரசியல் பலம், ஆள் பலம், சுய பலம் கொண்ட பரத்தை, ராஜகுமாரன் என்ற சிறிய ‘கடுகு’ வீழ்த்தியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘திருமதி தமிழ்’ படம் வெளிவந்த போது, அப்போது இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவராக இருந்த ராஜகுமாரன், இந்த ‘கடுகு’ படத்தில் தன் நடிப்பால் விமர்சிக்கப்படுபவராக இருப்பார். சமீபத்தில் கேட்ட ஒரு விஷயம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் எல்லாம் இருப்பினும், ஒவ்வொருவரின் சமையல் பக்குவமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அப்படித்தான் ராஜகுமாரனின் நடிப்பு இந்த ‘கடுகு’ படத்தில் விஜய் மில்டன் என்ற இயக்குனரால் பக்குவப்பட்டிருக்கிறது. யதார்த்தமான மண் மணத்தை வெளிப்படுத்தத் துடிக்கும் படங்களைப் படைக்க முயலும் இயக்குனர்களின் ஞாபகத்திற்கு இனி ராஜகுமாரனும் வருவார். ஆனாலும், உங்கள் வசன உச்சரிப்பை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள் ராஜகுமாரன். சில வசனங்களை சத்யம் தியேட்டரில் கேட்டால் கூடப் புரியவில்லை.

படத்தில் பரத்தை வில்லன் என்றெல்லாம் வழக்கமான சினிமாவில் வரும் வில்லனைப் போலச் சொல்லிவிட முடியாது. அவரும் படத்தில் ஒரு நாயகன்தான். அரசியல் ஆசையும், பதவி ஆசையும் இருக்கும் காரணத்தால், யாருக்கோ வரும் சபலத்தால் அவரும் வில்லனாக மாறிப் போகிறார். பரத்தைத் தேடி இனி முழு நீள வில்லன் கதாபாத்திரங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ராஜகுமாரனின் போலீஸ் ஸ்டேஷன் நண்பராக படத்தின் தயாரிப்பாளர் பாரத் சீனி. தமிழ் சினிமாவிற்குப் புதிதாகக் கிடைத்துள்ள குணச்சித்திரம் கலந்த ஒரு காமெடி நடிகர். நடிப்பைத் தொடர்ந்தால் பல தயாரிப்பாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

படத்தின் நாயகிகளாக ராதிகா பிரஷிதா, சுபிக்ஷா. பள்ளி ஆசிரியையாக சிறு வயதிலேயே பாலியல் வழக்கைச் சந்தித்தவராக ராதிகா பிரஷிதா. ராஜகுமாரனின் நல்லெண்ணங்களைப் பார்த்து அவரைக் காதலிக்கிறார்.

கல்லூரி மாணவியாக சுபிக்ஷா. அதிகமான வசனங்கள் இல்லை என்றாலும் காதல் பார்வையால் கவர்ந்து விடுகிறார்.

அருணகிரி பாடல்களுக்கு இசையமைக்க, அனுப் சீலின் பின்னணி இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அதிகமில்லை, பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

‘கோலி சோடா’ படத்தில் சாதாரண சிறுவர்கள் ஒரு பெரிய தாதாவை எதிர்ப்பதுதான் கதை. ‘கடுகு’ படத்தில் ஒரு சாதாரண மனிதன் பலம் வாய்ந்த ஒருவனை எதிர்ப்பதுதான் கதை.

‘கோலி சோடா’வில் இருந்த ஒரு அழுத்தம், சிறுவர்கள் கடைக்குள் அந்த தாதாவை அடித்து உதைக்கும் போது நம்மையும் ஆர்ப்பரிக்க வைத்தது. அதனுடன் ஒப்பிடும் போது ‘கடுகு’ படத்தில் பரத்தை, ராஜகுமாரன் அடித்து உதைக்க ஆரம்பிக்கும் போது நமக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அது மிஸ்ஸிங்…காரம் கொஞ்சம் குறைந்த ‘கடுகு’.

இருந்தாலும் மீண்டும் ஒரு யதார்த்த பதிவைக் கொடுத்ததற்காக விஜய் மில்டனை ‘கடுகு’ போன்று பாராட்டாமல் மலையளவு பாராட்டலாம்.

Read Previous

Appa goes to Malayalam

Read Next

8 Thottakkal – Official Trailer