தயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் – டான் சாண்டி
இசை – சாம் சி.எஸ்.
நடிப்பு – ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், விவேக் பிரசன்னா, ராதாரவி மற்றும் பலர்
கதை
ஜீவா, ஒரு ஏமாற்றுக்காரர். காலையில் பஸ்ஸில் பணத்தை அடிப்பது, அடுத்து மருந்துக் கடையில் வேலை செய்து பணம் அடிப்பது, இரவில் போலி மருத்துவராக பணம் சம்பாதிப்பது என இருக்கிறார். அவருக்கு வேலையை இழந்த சதீஷ், சினிமாவில் நடிக்கத் துடிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பணம். அதை வங்கியில் கொள்ளையடித்து எடுக்க நினைக்கிறார்கள். அவர்களுடன் பக்கத்து அறையில் இருக்கும் ஒருவரும் சேர்ந்து கொள்கிறார். வங்கி ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்று அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து அரசாங்கத்திடம் 20 கோடி பணம், விவசாயக் கடன் தள்ளுபடி என கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் கேட்டது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
லோக்கலாக பேசிக் கொண்டு நடிப்பது ஜீவாவுக்கு கை வந்த கலை. அதை இந்தப் படத்திலும் இயல்பாக செய்திருக்கிறார். சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் சிரிக்க வைப்பதை விட, சில காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு அதைச் செய்து விடுகிறார். ஜீவாவின் காதலியாக ஷாலினி பாண்டே. அதிக வேலையில்லை. காவல் துறை அதிகாரியாக ராதாரவி, வழக்கம் போல் அவருடைய அனுபவம் பேசுகிறது.
இசை, மற்றவை
இசை உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு பலத்தைக் கொடுக்கவில்லை. சிம்பன்சி காங்கிற்கு டிரைனிங் கொடுத்த டிரைனரை மட்டும் பாராட்டியே ஆக வேண்டும்.
படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நகைச்சுவைப் படத்தில் அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப் போராடுவதற்காக இயக்குனரைப் பாராட்டலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
‘கொரில்லா’ எனப் பெயர் வைத்துவிட்டு அதைச் சுற்றி கதை நகராமல் வங்கிக் கொள்ளை, விவசாயக் கடன் என எங்கெங்கோ நகர்கிறது. சிம்பன்சி காங்-கிற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.