‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் (எ) பாஸ்கன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என தொடர்ச்சியாக ‘ஹாட்ரிக்’ வெற்றியைக் கொடுத்த இயக்குனர் ராஜேஷ் , ஸ்டார் ஹீரோவாக வளர்ந்துள்ள கார்த்தியுடன் இணைந்து கொடுத்திருக்கும் படம் ‘அழகுராஜா’.
முதல் இரண்டு படங்களில் வளர்ந்து வரும் ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கிய வெற்றி பெற்றவர், மூன்றாவது படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றவர், நான்காவது படத்தில் கார்த்தி போன்ற ஒரு ஹீரோவை வைத்துக் கொண்டு எந்த அளவிற்கு வெற்றி பெற வேண்டும்.
ஆனால், கதையும் இல்லாமல், சுவாரசியமான திரைக்கதையும் இல்லாமல், கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் ஆகியோரையும் வீணடித்து, தன்னையும் தானாகவே கீழே இறக்கிக் கொண்டார் இயக்குனர் ராஜேஷ்.
முதல் மூன்று படங்களில் கதை என்பது கொஞ்சமாக இருந்தாலும், பல சுவாரசியமான சம்பவங்கள், சென்டிமென்ட் என விறுவிறுப்பான திரைக்கதையையாவது அமைத்திருந்தால், ஆனால், இந்த படத்தில் என்ன சொல்வது…..?
ஒரு லோக்கல் கேபிள் டிவியின் உரிமையாளர் கார்த்தி. அவருடைய வலது கரம் சந்தானம். விளம்பரங்களைப் பெறுவதற்காக அலையோ அலை என அலைகிறார்கள். வழக்கம் போல் ஹீரோயின் காஜல் அகர்வாலைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். சில பல மோதல்களுக்குப் பிறகு இருவரும் காதலர்கள் ஆகிறார்கள்.
ஆனால், இந்த காதலை ஏற்க மறுக்கிறார் கார்த்தியின் அப்பாவான பிரபு. அதற்குக் காரணம் , நம்மை எந்த விதத்திலும் பாதிக்காத ஒரு பிளாஷ்பேக். அப்பாவின் எதிர்ப்பையும் மீறி கார்த்தி தன் காதலில் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
வளவளவென்று பேசிக் கொண்டேயிருக்கும் கதாபாத்திரம் கார்த்திக்கு. பின்ன, கேபிள் டிவி ஓனரும் அவர்தான், ஆல் இன் ஆல் நிகழ்ச்சிகளுக்கும் ‘காம்பியர்’ அவர்தான். அது கூட பேசலைன்னா எப்படி. ஆனால், சந்தானத்தை விட இவர் ‘சவுன்ட்’தான் ஓவரா இருக்கு. எந்த சீன்லயும் நல்லா நடிச்சிடற மாதிரி ஒரு சீன் கூட வைக்கலை டைரக்டர். பாவம், கார்த்தியும் எவ்வளவு நேரம்தான் ஒரே மாதிரி நடிச்சிக்கிட்டிருப்பாரு.
தமிழ் சினிமா கதாநாயகியரை ‘லூசாகவே’ காட்டும் 99999999வது படம். இவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பெண், இங்கிலீஷ் மீடியம் படிச்சவரு இப்படி இருப்பாரான்னு நாம எதுவும் கேள்வி கேட்டுக்கூடாதுங்கற மாதிரியே இவரோட கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்காரு இயக்குனர். 3 படம் வெற்றி பெற்றாச்சி, இனி நாம என்ன கொடுத்தாலும் ரசிகர்கள் ரசிப்பாங்கன்ற மமதைதான் தெரியுது.
ஒரு பேக்கரியோட ஓனரா இருக்காரு சந்தானம். ஆனால், கலையார்வத்துல கார்த்தி கூடவே சம்பளம் வாங்காம வேலை செய்யறாரு. நாமும் படம் முடியற வரைக்கும் எங்கயாவது சந்தானம் சிரிக்க வைச்சிடுவாருன்னு பார்த்தால், அந்த வேலையை கனகச்சிதமா செஞ்சிடறாரு எம்.எஸ். பாஸ்கர். காஜல் அகர்வாலுக்கு அவர் பரதம் கத்துத் தர்ற காட்சிகள் மட்டுமே படத்தின் சிரிப்புக்கு உத்தரவாதம்.
சந்தானத்தின் ‘கரீனா சோப்ரா’ காமெடியெல்லாம் ரொம்ப ஓவர். நமது ரசிகர்களின் ரசனை அந்த அளவிற்கு தாழ்ந்து போய்விட்டதா என்ன ?
சமீப காலப் படங்களில் சிறந்த நடிகர்களான பிரபு, சரண்யா ஆகியோரை இந்த அளவுக்கு வேறு எந்தப் படத்திலும் வீணடித்திருக்க மாட்டார்கள். பிரபுவின் இளவயது கார்த்தியின் ஜோடியாக ராதிகா ஆப்தே (புரியாதவர்கள் படம் பார்க்கவும்) , நரேன் , கோட்டா சீனிவாசராவ் , நாசர் இவங்களும் படத்துல இருக்காங்க.
தமன் இசையில் “உன்னைப் பார்த்த நேரம்…, “யாருக்கும் சொல்லாம…” பாடல்கள் தாளம் போட வச்சிருக்கு.
மற்றபடி டெக்னிக்கலாக வேறு எந்த விஷயமும் குறிப்பிட்டுச் சொல்ற அளவுக்கு இல்லை..
அழகுராஜா – அவசரம்…
