தயாரிப்பு – ஸ்பாட்லைட் சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் – ஹென்றி ஜோசப்
இசை – கணேஷ் ராகவேந்திரா
பாடல்கள் – சினேகன், யுகபாரதி
ஒளிப்பதிவு – அருள் செல்வன்
படத்தொகுப்பு – மு. காசி விஸ்வநாதன்
கலை – ரூபேஷ்
நடனம் – பாபி ஆண்டனி
சண்டைப் பயிற்சி – ‘பயர்’ கார்த்திக்
நடிப்பு – டாக்டர் பி. சரவணன், வித்யா, அம்ரித், லீமா, கஞ்சா கருப்பு, ராஜ் கபூர், சிங்கம் புலி, மனோபாலா, நீபா மற்றும் பலர்.
வெளியான தேதி – டிசம்பர் 28, 2012
ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தை எடுக்க முயற்சி பண்ணியிருக்காங்க. லோ பட்ஜெட் படம்னு சொன்னாலும் ஓரளவுக்கு அதை மாத்திக் காட்டியும் இருக்காங்க.
டாக்டர் பி. சரவணன் ஒரு நேர்மையான சப்-இன்ஸ்பெக்டர். ஊர்ல நடக்கிற பெண் கடத்தல் சம்பவங்கள் காவல் துறைக்கு சவாலா இருக்கிற நேரத்துல உதவி கமிஷனரா நியமிக்கப்படறாரு ராஜ் கபூர். இவரோட ஐடியாவுல ஒரு கடத்தல் சம்பவம் நடந்தால் மாதிரி காட்டி கடத்தல்காரங்களை கண்டு பிடிச்சி, மக்களுக்கு தைரியம் கொடுக்கிற மாதிரி ஒரு நாடகம் நடத்த பிளான் போடறாங்க.
அந்த பிளான் படி சரவணன்தான் கடத்தல்காரன். ஒரு கல்யாண மண்டபத்துல இவங்க நாடகம் அரங்கேறது. ஆனால் சரவணன் , போடற திடீர் பிளான்னால என்ன நடக்குது, கடத்தல்காரங்களை கண்டு பிடிச்சாங்களா இல்லையான்றதுதான் படத்தோட கதை.
தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு டாக்டர். சப் இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு பொருத்தமான தோற்றம் டாக்டர் பி.சரவணன். போலீஸ் கேரக்டர்னாலே விரைப்பா இருக்கணும்னு டைரக்டர் சொன்னாரா, இல்ல இவரே இப்படிதானான்னு தெரியலை. பேச மட்டும் செய்யறாரு, கொஞ்சம் முயற்சி பண்ணி நடிக்கவும் செஞ்சிருக்கலாம்.
ஹீரோவை காதலிக்கிற வழக்கமான ஹீரோயின் கேரக்டர்ல வித்யா. ஹீரோ செய்யற நல்ல விஷயங்களைலாம் பார்த்து காதலிக்கிறாங்க. இரண்டு பாட்டுக்கும், சில காட்சிகளுக்கும் வந்து போறாங்க.
அம்ரித், லீமா இளம் காதலர்கள், கடைசியில கதையோட ட்விஸ்ட்டுக்கு பயன்பட்டிருக்காங்க.
ராஜ்கபூர் உதவி கமிஷனர், அவர் ஒரு பிளான் போட போயிட்டு , நடக்கிறது வேற மாதிரி நடக்குது. வழக்கமான அலட்டல் இல்லாம யதார்த்தமா நடிச்சிருக்காரு.
கஞ்சா கருப்பு காமெடிய விட, சிங்கம் புலி அடிக்கிற கமென்ட்டுகள்தான் கொஞ்சம் ரசிக்க வச்சிருக்கு.
கணேஷ் ராகவேந்திரா இசையில ஒரு சில பாடல்கள் இனிமை.
இடைவேளை வரைக்கும் படம் கொஞ்சம் சுவாரசியமாவும் பரபரப்பாவும் நகருது. அப்புறம் கல்யாண மண்டபத்து காட்சிகள்ல அப்படியே நின்னுடுது. இடைவேளைக்குப் பிறகு வேற விதமான காட்சிகள்ல இயக்குனர் ஹென்றி ஜோசப் படத்தை நகர்த்தியிருக்கலாம்.
டாக்டர் பி. சரவணனின் நடிப்பு ஆசைக்கு ‘அகிலன்’.
