A 1 – விமர்சனம்

கதை

சந்தானம் ஒரு லோக்கல் பையன். தாரா அலிசா பெரி பிராமணப் பெண். வீரமுள்ள பிராமணப் பையனை மணக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர். புரட்டாசி சனிக்கிழமைக்காக நாமம் போட்டு வந்த சந்தானத்தின் வீரத்தைப் பார்த்து, பிராமணப் பையன் என நினைத்து அவருக்கு முத்தம் கொடுத்து உடனே காதலிக்க ஆரம்பிக்கிறார். அதன் பின்தான் அவர் பிராமணப் பையன் இல்லை என்பது தெரிய வருகிறது. காதலர்கள் பிரிகிறார்கள். சாலையில் நெஞ்சு வலியால் துடித்த தாராவின் அப்பாவை சந்தானம் காப்பாற்றுகிறார். அதனால், மீண்டும் காதல் வருகிறது. சந்தானமும் பெண் கேட்டு குடும்பத்தாருடன் செல்ல, தாரா அப்பாவால் அவமானப்படுத்தப்படுகிறார். கோபமடையும் சந்தானத்திடம் அப்பா சொல்லை மீற முடியாது என்கிறார் தாரா. ஊரே போற்றும் உத்தமரான அப்பாவைப் பற்றி தவறான ஒரு விஷயத்தை ஆதாரத்துடன் காட்டினால் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறார். கோபத்துடன் குடிக்கும் சந்தானத்தின் நிலையைப் பார்த்து, அவரது நண்பர்கள் தாராவின் அப்பாவை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், அதைக் கொலை எனத் தெரியாமல் தாரா அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்ததாகச் சொல்லி அவரது சடலத்தை வீட்டில் சேர்க்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறார் சந்தானம். ஒரு காட்சியில் கூட காமெடி கிராப் இறங்காமல் பார்த்துக் கொள்கிறார். காமெடியில் இளைக்காதவர் ஆங்காங்கே உடல் இளைத்து காணப்படுகிறார். காமெடிக்கு சத்தான உடம்பும் தேவை சந்தானம் அவர்களே, கவனித்துக் கொள்ளுங்கள். நாயகி தாராவும் பிராமணப் பெண்ணாக கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தானத்தின் நண்பர்கள் மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி கூடுதல் நகைச்சுவைக்கு காரணகர்த்தாக்கள். சந்தானத்தின் அப்பா எம்எஸ் பாஸ்கர் , தாராவின் அப்பா யாட்டின் கார்யேகர் அவரவர் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.

இசை, மற்றவை

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘மாலை நேர மல்லிப்பூ‘ வித்தியாசமாய் ஒலிக்கிறது. ஒரு தெரு, இரண்டு வீட்டுக்குள்ளேயே அதிகக் காட்சிகள் நகர்கின்றன. அதையெல்லாம் கவனிக்காத அளவிற்கு ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் பிடித்திருக்கிறார். லியோ ஜான்பால் படத் தொகுப்பு தேவையற்ற காட்சிகளை எடிட்டிங் டேபிளிலேயே கட் செய்து விட்டிருக்கிறது. 1 மணி நேரம் 50 நிமிடங்கள்தான் படம்.

 

சந்தானம்…சந்தானம்…சந்தானம்…

 

சாவு வீட்டிலேயே நகரும் இடைவேளைக்குப் பிறகான காட்சிகள். சில காட்சிகளில் நேரடியாகவும், சில காட்சிகளில் மறைமுகமாவும் பிராமண சமூகத்தை கிண்டலடிக்கும் வசனங்கள்.

Read Previous

கொளஞ்சி – விமர்சனம்

Read Next

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்