என் பிறந்தநாளைக் கண்டாலே பயம் கொள்ளச் செய்கிறது: யஷ் உருக்கம்

என் பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கிறது என்று யஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

’கே.ஜி.எஃப்’ படங்களுக்குப் பிறகு இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் யஷ். 

தற்போது கீது மோகந்தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடிக்கவுள்ளார். கரீனா கபூர் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஜனவரி 8-ம் தேதி யஷின் பிறந்த நாளாகும். இதற்காக கர்நாடக மாநிலத்தில் டிஜிட்டல் பேனர் வைக்கும் போது, 3 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து உயரிழந்த ரசிகர்களின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார் யஷ். மேலும், பொருளாதார ரீதியாக உதவிகள் செய்தார். இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் யஷ் பேசும் போது, “ரசிகர்கள் வாழ்த்த வேண்டும் என்று நினைத்தால், இருக்கும் இடத்திலிருந்தே என்னை வாழ்த்துங்கள். அதுவே போதும்.

இதுபோன்ற சம்பவங்கள் என்னுடைய சொந்த பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கின்றன. ரசிக மனப்பான்மையை இப்படி காட்டாதீர்கள். இந்த வழியில் உங்களுடைய அன்பைக் காட்டாதீர்கள். ரசிகர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

பேனர் வைப்பதோ, பைக் ரேஸில் ஈடுபடுவதோ, ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதோ வேண்டாம். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் என்னைப் போலவே வளரவேண்டும் என்பதே என் நோக்கம். 

உண்மையான ரசிகராக இருந்தால், உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்காகவே மட்டும் அர்ப்பணித்து பணியாற்றுங்கள். நீங்கள்தான் உங்கள் குடும்பத்தினருக்கு அனைத்துமே”

இவ்வாறு யஷ் தெரிவித்துள்ளார்.

Read Previous

ஓடிடி நிறுவனங்களைச் சாடிய கங்கணா

Read Next

விக்னேஷ் சிவன் படத்தில் சீமான்