‘மாநகரம், கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள 232வது படத்தை இயக்கப் போகிறார் என இதற்கு முன் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் டைட்டில் அறிவிப்பை டீசருடன் வெளியிட்டுள்ளார்கள்.
ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1984 ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ என்ற படத் தலைப்பையே இப்படத்திற்கு மீண்டும் வைத்துள்ளார்கள். தலைப்பு அறிவிப்பிற்காக வெளியிட்டுள்ள டீசரைப் பார்க்கம் போது அரசியல் க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
மலைப் பிரதேசத்தில் தனிமையில் இருக்கும் ஒரு பங்களாவில் இருக்கும் கமல்ஹாசன் ஆங்காங்கே விதவிதமான துப்பாக்கிகளையும், கத்தியையும் மறைத்து வைக்கிறார். ஒரு நீண்ட மேஜையில் பத்துப் பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிட தலை வாழை இலை போடப்படுகிறது. தானே சமைத்த அசைவ உணவு வகைகளைப் பரிமாறுகிறார் கமல்ஹாசன். போலீஸ் அதிகாரி, கோட் சூட் அணிந்தவர்கள், பேண்ட் சட்டை போட்டவர்கள், வேட்டி அணிந்தவர்கள் முகமூடி அணிந்தபடி வந்து அமர்கிறார்கள். “ஆரம்பிக்கலாங்களா” என்று கேட்டுவிட்டு மேஜைக்கு அடியில் இருந்து ஆவேசச் சிரிப்புடன் இரண்டு கோடாரியை எடுத்து வீசுகிறார்.
பின்னணியில் 1986ல் வெளிவந்த ‘விக்ரம்’ என்று பாடல் பாணியில் அமைந்த இளையராஜாவின் இசை ஒலிக்கிறது. ஆனால், இந்த ‘விக்ரம்’ படத்திற்கு இசை அனிருத்.
படத்தை இன்று டுவிட்டரில் விளம்பரப்படுத்தும் போதும் பழைய ‘விக்ரம்’ பாடல் வரிகளில் இருந்து ‘என் வீரமே வாகையே சூடும்’ என்ற வரிகளையும் பயன்படுத்தி உள்ளார்கள்.
கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திற்கு முன்பாகவே இப்படம் எடுக்கப்பட்டு வெளிவந்துவிடும் எனத் தெரிகிறது.