‘விடுதலை’ முதல் பாகத்தின் வெளியீடு, விரைவில் அறிவிப்பு

ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார், ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்க, வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விடுதலை’.

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப் பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்திலும், சூரி முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். 

சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி உள்ளது. 

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் இறுதிக் கட்டப் ‌ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளதாம். தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் அப் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில்  அமைக்கப்பட்ட 10 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரம்மாண்டத்தைக் கூட்டியுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாக தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு  இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத் துறை ஒரு  கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொடைக்கானலில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்‌ஷன் காட்சியை அமைக்கிறார். பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் குழுவினர் இந்த ஆக்‌ஷன் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்கள்.

‘விடுதலை’ படத்தில் பிரமாண்டமான நட்சத்திரக் கூட்டணி அமைந்துள்ளது.  விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ ஆரம்பம்

Read Next

ஆழமான கதைக்கருவுடன் வெளிவரும் ‘சினம்’

Most Popular