‘கோட்’ ரீமேக்கா? வெளியீடு எப்போது இருக்கும்? – வெங்கட்பிரபு பதில்

‘கோட்’ கதை ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று வெளியான தகவலுக்கு வெங்கட்பிரபு மறுப்பு தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது ‘கோட்’ படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பாடல் காட்சியொன்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ‘ஜே.பேபி’ படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராககலந்துக் கொண்டார் வெங்கட் பிரபு.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் ‘கோட்’ குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு பேசியதாவது:

”பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் அப்டேட்கள் எல்லாம் வெளியாகும். விஜய் ரசிகர்கள் திட்டுகிறார்கள். அதெல்லாம் ஜாலி தான். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் அனைத்து அப்டேட்களும் ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகும்.

’கோட்’ படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த மாதத்துடன் க்ளைமேக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு கூட முடிந்துவிடும். இன்னும் ஒரே ஒரு வெளிநாட்டு படப்பிடிப்பு  மட்டுமே பாக்கி இருக்கிறது. இது எந்தவொரு படத்தின் ரீமேக்கும் அல்ல. ரொம்பவே புதிய கதை. படத்தின் போஸ்டரில் இரண்டு விஜய் இருக்கிறார்கள். அதெல்லாம் என்னவாக இருக்கும் என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சென்னையில் 5-6 நிறுவனங்களில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் ரொம்பவே வலுவான படம் ’கோட்’. ஆகையால் அந்தப் பணிகள் முடிவதைப் பொறுத்தே வெளியீடு முடிவு செய்யப்படும்.

விஜய் சார், அஜித் சார் இருவருமே இயக்குநர்களின் நடிகர்கள். முதலில் படப்பிடிப்பு தொடங்கும் போது பயமாகவே இருக்கும். ஆனால், இருவருமே படப்பிடிப்பு தளத்தினை இலகுவாக ஆக்கிவிடுவார்கள்”

இவ்வாறு வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

Read Previous

100 கோடி வசூலை கடந்தது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

Read Next

மகளிர் தினத்தில் கார்டியன் வெளியாவது மகிழ்ச்சி – ஹன்சிகா

Most Popular