தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி 

கொரானோ பரவல் லேசாக ஆரம்பித்த கடந்த வருடம் மார்ச் மாதத்திலேயே சினிமா தியேட்டர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடிவிட அரசு உத்தரவிட்டது.

அதன்பின் கொரானோ தொற்று அதிகமாகவே தியேட்டர்களைத் திறப்பது தள்ளிக் கொண்டே போனது. நவம்பர் மாதத்தில் தொற்று குறைய ஆரம்பித்ததுமே நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

இருந்தாலும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதை அதிகரிக்க வேண்டும் என திரையுலகினர் சார்பில் அரசுக்குதொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

ஜனவரி மாதம் பொங்கல் முதல் அதில் மாற்றம் வரலாம் என தகவல் பரவியது. அதையடுத்து விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தையும், சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்தையும் வெளியிட திட்டமிட்டார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து நடிகர் விஜய் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு கோரிக்கை விடுத்தார். நடிகர் சிம்புவும் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இன்று அரசு தரப்பில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திரைப்படங்களைத் திரையிடுவதற்கு முன்பு கொரானோ தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை விஷயங்களைப் பற்றிய படத்தையும் திரையிட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு திரையுலகில் உள்ள பலரும் நன்றியைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனால், பொங்கல் வெளியீடாக வர இருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read Previous

ஈஸ்வரன் – மாங்கல்யம்…..பாடல் வரிகள் வீடியோ

Read Next

தப்பும் தவறுமாய் ‘கேஜிஎப் 2’ விளம்பரம்