100வது நாளைக் கடந்த ‘நந்தினி’ மெகா தொடர்

அவனி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிட், சார்பில் சுந்தர் .சி தயாரிப்பில் ராஜ்கபூர் இயக்கித்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நந்தினி’ மெகா தொடர் வெற்றிகரமாக 100வது நாளைக் கடந்திருக்கிறது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே நம்பர் 1 இடத்தை இந்தத் தொடர் பிடித்துள்ளதாக ‘நந்தினி’ குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

டைரக்டர் சுந்தர்.சியின் கதைக்கு வெங்கட்ராகவன் திரைக்கதை அமைக்க பத்ரி, கே.என்.நடராஜன் வசனம் எழுதி யு.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
தொடர் ஆரம்பித்த சில வாரங்களிலே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ள இத் தொடரின் கதை இனி வரும் நாட்களில் மிகவும் பரபரப்பாக நகர இருக்கிறது.

ஆவிக்கும் பாம்புக்கும் போட்டி என்றால் எப்படி இருக்கும் என்பதை சுவாரசியமான கதைக் களத்தில் இனி ‘நந்தினி’ தொடரில் பார்க்கலாம்.

பிரம்மாண்டம் மற்றும் அதன் சினிமா தரமும்தான் சின்னத் திரையில் குறுகிய காலத்தில் ‘நந்தினி’ தொடர் பெற்ற ஆதரவிற்கு முக்கியக் காரணம் . இரவு 9 மணி ஆகிவிட்டால் அனைவரின் கவனமும் ‘நந்தினி’ தொடரை தவறாமல் பார்ப்பதில் திரும்பி விடுகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை நந்தினி தொடர் கவர்ந்துள்ளது.

தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடியாகவும், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகியும் ஒளிபரப்பாகி வரும் இத் தொடரை மலேசியா, மைசூர், கல்லிடைக்குறிச்சி, பொள்ளாச்சி, ரிஷிகேஷ் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளனர்.

‘நந்தினி’ தொடர் பற்றி இயக்குநர் ராஜ் கபூர் கூறியதாவது,

‘நந்தினி’ என்ற பிரம்மாண்டத்தை இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு எபிசோடு எடுக்க ஒரு வாரம் முன்பே முடிவு செய்வோம். இது ஒரு நாளில் செய்யக்கூடியது இல்லை. இதில் இரண்டு குழுவாக உள்ளோம். சினிமா போன்றே இங்கேயும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள் . சுந்தர்.சி அவர்கள் இத்தொடரை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு அவர் தனது கருத்தை தெரிவித்து சில திருத்தங்கள் செய்வார். எபிசோடு எவ்வளவு என்று சொல்லமுடியாது. அது ரசிகர்களின் வரவேற்பை பொறுத்தது.

இத் தொடரில் எங்களது கடுமையான உழைப்பு உள்ளது. மாதத்தில் 25 நாட்கள் வேலை இருக்கும். ஒரு மணி நேரத்தில் எடுத்த காட்சியை கூடுதலாக நேரம் ஒதுக்கி எடிட் செய்வேன். கிளாமர் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. இளைஞர்களிடம் நந்தினி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குஷ்பூ இந்தத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அது மட்டும் அல்லாமல் மற்றுமொரு பிரபலமும் இத்தொடரின் முக்கிய பகுதி ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்,” என்றார்.

நந்தினி தொடரின் கதாநாயகி நித்யா ராம் பேசியதாவது,

“தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் நடிக்கும் போது தயக்கமாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது. எனது தாய்மொழி கன்னடம். தற்போது தமிழ் எனக்கு நன்கு பழகிவிட்டது.

தற்போது எனக்கு என்னுடைய தாய் மொழியை விட தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது . சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வுதான் இருக்கிறது. மேலும் எனது உடை மற்றும் சிகை அலங்காரம் அனைத்தையும் குஷ்பு மேடம் தான் தேர்வு செய்வார்கள்.இங்கு வந்து நான் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு நந்தினி தொடரைப் பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள் . அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புகழ் அனைத்தும் ராஜ் கபூர் சார் அவர்களையே சேரும். இந்தத் தொடரில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்,” என்றார்.

Read Previous

மக்களை மாற்றணும், மாற்றத்தை உண்டாக்கணும் – ரஜினிகாந்த் பேச்சு

Read Next

Zee Tamil overhauls timings of Sunday shows

Most Popular