புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா – முதல்வரை சந்தித்த திரைப்படக் குழு

புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, நடிகர் கார்த்தி, நடிகை ரோகி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர்.

அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி பேசுகையில்,

“ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதிலிருக்கும் சட்டத்திருத்தங்கள் அனைத்துமே சினிமா தொழிலாளர்களையும், சினிமா எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தையுமே பாதிக்கும் அளவுக்கு இருக்கின்றன. 

அதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்றால், பைரசிக்கு எதிராக வலுவான சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். அச்சப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தணிக்கைச் சான்றிதழ்தான். 

ஒவ்வொரு படத்தையும் ஒரு குழுவினர் பார்த்துவிட்டுத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவார்கள். அதில் பிரச்சினை இருந்தால், அவர்களுக்கு மேல் ஒரு குழு இருக்கும். அவர்களிடம் சொல்லலாம். அங்கும் பிரச்சினை என்றால் ட்ரிபியூனலுக்குச் செல்லலாம். அதை 2017-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டார்கள்.

ஆனால், இப்போது மத்திய அரசே அடுத்த தணிக்கை முறையீடு தளமாக இருக்கப் போகிறது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை எந்தவொரு தருணத்திலும் அரசாங்கம் ரத்து செய்ய முடியும் என்ற சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. இனிமேல் எடுக்கப் போகிற படங்கள் மட்டுமன்றி, இதுவரை எடுக்கப்பட்ட படங்களுக்கும் ஆபத்தாக இருக்கப் போகின்றன. 
இதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதை இன்னும் அறிவிக்கவே இல்லை. அதற்கு ஒரு குழு இருக்கப் போகிறதா, அதில் சினிமா தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்ற எதுவுமே தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம் என்பது கருத்துச் சுதந்திரம் மட்டுமில்லாமல் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் விஷயமாக இருக்கிறது.

தமிழ்த் திரையுலகினர் சார்பில் தமிழக அரசின் ஒத்துழைப்பு, ஆதரவு தேவை என்பதால் தமிழக முதல்வரைச் சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளைச் சொல்லியிருக்கிறோம். அவர்களும் அதைப் பார்த்து ஆதரவு தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 

இது எங்களுடைய உரிமைக்கான ஒரு குரல். இதை அப்படியே நிறுத்தாமல் பெரிதாக எடுத்துச் செல்லவுள்ளோம். எங்களுடைய உரிமைக்காகப் போராடுவோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

Read Previous

சென்னையில் இயக்குனர் ஷங்கர், ராம் சரண் சந்திப்பு

Read Next

தமிழும் சரஸ்வதியும் – விஜய் டிவியில் புதிய தொடர்

Most Popular