பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா, யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், விக்னேஷ்காந்த், அருண் வைத்யநாதன், விஸ்வா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டக்கர்’.
சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் அருமை என்று குறிப்பிடுவதை ‘டக்கர்’ எனச் சொல்வார்கள். ஆனால், அதற்கு ஹிந்தியில் ‘மோதல்’ என்று அர்த்தம் என்கிறார் படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ். அந்த அர்த்தத்தில்தான் இப்படத்திற்கு ‘டக்கர்’ எனப் பெயர் வைத்திருக்கிறாராம்.
படம் பற்றி அவர் கூறுகையில்,
“சித்தார்த் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். திவ்யான்ஷா மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு வித குணம், சிந்தனை கொண்டவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் ஒன்றாக பயணிக்க நேரிடுகிறது. அந்த பயணத்தில் என்ன நடந்தது, அவர்களுக்கிடையே காதல் வந்ததா ?, காதலை இருவரும் எப்படிப் பார்க்கிறார்கள், என்பதை ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருக்கிறேன்.
பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை வைத்து தான் திரைக்கதையை எழுதுகிறோம். அதுபோல தான் நாயகியின் கதாபாத்திரத்தை ரொம்ப போல்ட் ஆன ஒருவராக வைத்திருக்கிறேன். அதே போல், கிராமத்தில் இருந்து நாயகன் சென்னைக்கு வருகிறார். இருவருக்கும் முரண்பாடான கருத்து வருகிறது. இப்படிப்பட்ட பெண்கள் சிட்டியில் சாதாரணமாக இருந்தாலும், கிராமத்தில் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அது தான் இது. இப்படி ஒரு பொண்ணு, அப்படி ஒரு பையன், இவர்களுக்கு இடையே காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் திரைக்கதை.
டிரைலரில் கொஞ்சம் அப்படி, இப்படியான ஒரு காட்சி இருக்கிறது. ஆனால், அதன் பிறகு வரும் காட்சிகள் எல்லாமே அப்படி இருக்காது. அதனால், இது அடல்ட் படம் அல்ல, அனைவரும் பார்க்க கூடிய படம் தான். தணிக்கை அதிகாரிகள் படம் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் வழங்கியிருக்கிறார்கள். அதனால், நிச்சயம் இது அடல்டுக்கான படம் இல்லை. குடும்பத்துடன் பார்த்தால் கூட சிரித்துவிட்டு தான் வருவார்கள்.
கோபமான இளைஞர் வேடத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். அவரைச் சுற்றி தவறாக எந்த விஷயம் நடந்தாலும் அதை பார்த்து சட்டென்று கோபமடைந்துவிடுவார். நிஜத்திலும் அவர் அப்படித் தான். சமூகத்தில் ஏதாவது தவறு நடந்தால் அதை எதிர்த்து குரல் கொடுப்பார். இந்தப் படத்திலும் அதுபோன்ற ஒரு வேடத்தில் தான் நடித்திருக்கிறார். அவரை கிராமத்து இளைஞராக, அதுவும் ஏழை வீட்டு இளைஞராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், படத்தைப் பார்த்தால் அவரை அந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்வீர்கள், அதற்கான சில காட்சிகளை வைத்திருக்கிறேன். அடுத்து ஒரு படமும் அவரை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்.
காதல் மற்றும் பயணம் தொடர்பாக சில படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படத்தில் வெறும் காதல் மற்றும் பயணத்தை மட்டுமே மையப்படுத்தாமல், தத்துவமான விஷயங்கள் நிறைய பேசியிருக்கிறோம். டிரைலரில் கூட ஒரு வசனம் வரும், “பணம் இருந்தால் நிம்மதி போயிடும்” என்று ஹீரோயின், ஹீரோவிடம் சொல்வார்கள். ஆனால் ஹீரோ, “இதெல்லாம் பணம் இருக்குறவங்க இல்லாதவங்க கிட்ட சொல்றது”, என்று சொல்வார். இப்படி படம் முழுவதுமே நிறைய விஷயங்களை பேசியிருக்கிறோம்.
இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது, பெரிய அளவில் வரவேற்பும் பெற்றிருக்கிறது. இசைக்காக படம் நிச்சயம் பேசப்படும் என்று நான் நம்புகிறேன். இதில் இருக்கிற அனைத்து பாடல்களும் அனைவரின் பிளே லிஸ்டிலும் இருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா அந்த அளவிற்கு சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.
யோகி பாபு படம் முழுவதும் வருகிறார். அவர் பெரிய டானின் மகனாக வருகிறார். அந்த டானும் யோகி பாபு தான். தனது மகன் பெரிய டானாக வேண்டும் என்பதற்காக அப்பா யோகி பாபு அவரை வில்லனிடம் சேர்த்து விடுகிறார். அதனால் அவர் வில்லனுடன் பயணிப்பது போல் காட்சிகள் இருக்கும்,” என்றார் இயக்குனர்.
‘டக்கர்’, மே மாதம் 26ம் தேதி வெளியாகிறது.