சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி உருவானது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகவிருந்த படத்தின் பணிகள் தாமதத்தினால், அதன் படப்பிடிப்பினை ஒத்திவைத்துள்ளார் சூர்யா. இதனை 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுதா கொங்காரா படத்திற்காக ஒதுக்கப்பட்ட தேதிகள் யாருக்கு என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.
இதனிடையே, யாரும் எதிர்பாராத வண்ணம் ‘சூர்யா 44’ படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளனர். இந்தக் கூட்டணி அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
திடீரென்று இந்தக் கூட்டணி எப்படி உருவானது என்று விசாரித்த போது, ‘ஜகமே தந்திரம்’ பட வெளியீட்டுக்குப் பின்பு சூர்யாவை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
அதில் சூர்யா சில மாற்றங்களைச் செய்ய சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு ‘மஹான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பிஸியாகிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.
தற்போது ‘விஜய் 69’ படத்தின் இயக்குநர் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ் இல்லை என்பது முடிவாகிவிட்டது. அதே போல் சுதா கொங்காரா படத்துக்கு இப்போது தேதிகள் இல்லை என்பதும் தெரிந்துவிட்டது.
உடனடியாக சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது சூர்யா சொன்ன மாற்றங்கள் உள்ளிட்டவை சேர்த்து கதையை தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
இரண்டு மாதங்களில் முதற்கட்ட பணிகள் முடித்து, படப்பிடிப்பு தொடங்கலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையவே உடனடியாக இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.