‘கேஜிஎப், காந்தாரா, சலார்’ ஆகிய படங்களைத் தயாரித்த கன்னடத் தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே பிலிம்ஸ். தற்போது தமிழ் சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார்கள்.
சூர்யாவின் 48வது படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தசெ ஞானவேல் இயக்குகிறார். ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையும் படம் இது.
சாய் அபயங்கர் இசையமைக்க, கயாடு லோகர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இப்படம் பற்றி கூறுகையில்,
“தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேரப் பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.
இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அவர்கள், அழுத்தமான கதைகளத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாகக் கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றித் திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு சிறந்தப்படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடை செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது. இந்த தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குனர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது. அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட நட்சத்திர நடிகர் சூர்யா அவர்களோடும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களோடும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்,’’ என்கிறார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.
மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.
எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும், பா. கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள்.
விரைவில் இப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.