நடிகர் விக்ரம் பிரபுவின் 25வது படமாக இந்த 2025ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 25ம் தேதியில் ‘சிறை’ படம் வெளிவருகிறது. படத்தின் மீது திரையுலகத்தினரிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தனது 25 பட திரையுலக அனுபவத்தைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் விக்ரம் பிரபு.
‘டாணாக்காரன்’ படத்தில் பயிற்சி போலீஸாக இருந்தேன், அதனால் எடை குறைத்தேன். *சிறை*யில் முழுநேர அதிகாரி என்பதால் எடை கூட்டி நடித்தேன். இது உடல் ரீதியாக ஒரு புதிய அனுபவம். ஒவ்வொரு வேடத்துக்கும் என்னை மாற்றிக் கொள்ளும் சவாலை நான் ரசிக்கிறேன்.”

தெலுங்கில் நடித்த ‘காட்டி’ படம் எனக்கு நல்ல பெயர் கொடுத்தது. அதில் நான் டப்பிங் பேசியதே மிகுந்த மகிழ்ச்சி. அனுஷ்காவுடன் வேலை செய்தது ஒரு அழகான அனுபவம் — அவர் மிகவும் மனம் திறந்தவர், இரக்கமுள்ளவர். தெலுங்கு பக்கம் இன்னும் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் இனி கதைகளை நன்கு தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளேன்.”
இயக்குநர் தமிழ் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை இது. அந்த நம்பிக்கையால்தான் இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. மேலும், இயக்குநர் சுரேஷ், அவர் வெற்றிமாறனின் இணை இயக்குநராக பல வருடங்கள் பணியாற்றியவர் — அவரது அனுபவம் மிகத் தெளிவாக இந்த படத்தின் கதை சொல்லும் பாணியில் தெரிகிறது.
தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித்குமார் அவர்களின் மகன் எல்.கே. ஆக்ஷய் குமார் இந்த படத்தில் நடித்திருக்கிறார். மிகவும் ஆர்வமுள்ளவர். அவரின் உழைப்பு, ஈடுபாடு எனக்கு நன்றாகத் தெரிந்தது. புதியவராக இருந்தாலும், சிறப்பாக நடித்திருக்கிறார்.
பலர் கேட்கிறார்கள் ‘க்ரைம் படங்கள் மாதிரியானக் கதைகளில் தான் நடிக்கிறீர்கள்?’ என்று. ஆனால் எனக்கு எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. எந்த வகை கதையாயினும், அதை உண்மையாகச் செய்தால் அதுவே நடிப்பு. அடுத்தடுத்த படங்களில் இன்னும் பல்வேறு வகைகளில் நடித்து காட்டுவேன்.”