சம்பளத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது: ரஜினியுடன் இணைவது குறித்து கமல் சூசகம்

இருவருமே சம்பளத்தை பற்றி சிந்திக்கக் கூடாது என்று ரஜினியுடன் இணைவது குறித்து கமல் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ரஜினி – கமல் இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். இருவர் இணைந்து கடைசியாக ’16 வயதினிலே’ படத்தில் நடித்தார்கள். பின்பு ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இணைந்து படம் நடிக்கவே இல்லை.

’இந்தியன் 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில், “மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா” என்ற கேள்விக்கு கமல் கூறியிருப்பதாவது:

“ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு இடையே இதைப் பற்றி பேசுவோம். சமீபத்தில் எனது அலுவலகத்தை புதுப்பித்து 3 மாடிக் கட்டிடமாக மாற்றினேன். அதே தெருவில் என் மோட்டார் சைக்கிளில் ரஜினியை வைத்து ஓட்டிக் கொண்டு எங்கள் எதிர்காலத்தை பற்றி பேசியது நினைவிருக்கிறது. 40 ஆண்டுகள் கழித்து அப்போது இல்லாத ஒரு கட்டிடத்தின் மீது 4-வது மாடியில் நிற்கிறோம் என்று அங்கு வந்த ரஜினியிடம் கூறினேன்.

இப்போதாவது நாம் இணைந்து படம் பண்ணலாம் என்று ரஜினி கூறினார். அதற்கு ராஜ்கமல் நிறுவனம் எப்போதுமே தயாராக இருக்கிறது எனக் கூறினேன். இது தான் நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து கடைசியாக பேசியது.

நாங்கள் இணைந்து படம் செய்தால் இருவருமே சம்பளம், படத்தின் கதாபாத்திரம் குறித்து சிந்திக்கக் கூடாது. இருவருமே 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி எதை பற்றியும் சிந்திக்காமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தோமோ அப்படி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அனைவருக்கும் அந்தப் படம் பிடிக்கும், இல்லையென்றால் எங்களுக்கு மட்டும் பிடிக்கும் படமாக இருக்கும்”

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Read Previous

சூர்யா – ரவிகுமார் படம் டிராப்

Read Next

‘ரோபோ’வில் நடிக்காதது ஏன்? – கமல் விளக்கம்

Most Popular