ராவடி – வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பஸில் ஜோசப் மற்றும் L.K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படம், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ (Gujilimasthu) என்ற வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள ‘ராவடி’, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இளைஞர்களை மையப்படுத்திய காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார்.

படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், ‘குஜிலிமஸ்து’ வீடியோவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் வெளியாகியுள்ளது.

பார்ட்டி கொண்டாட்டத்துடன் தொடங்கும் இந்த வீடியோவில், ‘அராஜகம் பத்தல பத்தல’ என்ற பாடலின் பின்னணியில் காதல், கல்லூரி வாழ்க்கை, சண்டை, கொண்டாட்டம் என படத்தின் பல்வேறு அம்சங்கள் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன. பஸில் ஜோசப் மற்றும் L.K. அக்ஷய் குமார் இருவரும் வெவ்வேறு கதாபாத்திரப் பரிமாணங்களில் தோன்றுவது, படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

இளமை துள்ளலுடன் கூடிய நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கலகலப்பான சம்பவங்கள், காமெடி காட்சிகள் மற்றும் இளைஞர்களை கவரும் திரைக்கதை என முழுமையான என்டர்டெயின்மென்ட் படமாக ‘ராவடி’ உருவாகியுள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒகேனக்கல்லின் இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பஸில் ஜோசப் மற்றும் L.K. அக்ஷய் குமாருடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பையும், P. S. ஹரிஹரன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு L.K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே வெளியான ‘ராவடி’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோவும் படத்தின் வெளியீட்டு தேதியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

வரும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ராவடி’, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரசிகர்களுக்கு இளமை துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறது.

Read Previous

‘என்ன விலை’ வரவேற்பு – குழுவினர் மகிழ்ச்சி

Read Next

‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்த ஜீவன்