‘காக்க காக்க’ படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்திலும், ‘திருட்டுப் பயலே, நான் அவனில்லை,’ படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்து கவனம் பெற்ற நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார். அவர் தற்போது அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘லவ்வர் பாய்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான ஜீவன், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து வழக்கமான கமர்ஷியல் கதைகளைத் தவிர்த்து, வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ஹீரோவாகவும் நடித்த அவர், குறுகிய காலத்திலேயே தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.
திரையுலகில் இருந்து சில காலம் விலகியிருந்த ஜீவன், தற்போது ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கும் இப்படத்தில், வளர்ந்து வரும் நடிகர் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
‘லவ்வர் பாய்’ படப்பிடிப்பில் ஜீவன் இணைந்துள்ளதை அறிவிக்கும் வகையில், படக்குழு சிறப்பு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டைலிஷான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் ஜீவனின் திரையிருப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஜீவன் இணைந்திருப்பது ‘லவ்வர் பாய்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதேநேரம், படத்தில் ஜீவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த எந்த தகவலையும் படக்குழு இதுவரை வெளியிடாமல் உள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்து வருகிறார். ‘லவ்வர் பாய்’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்களை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.