தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நடிகை நிதி அகர்வால், தனது திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், அதிகமான படங்களில் நடிப்பதை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், தனக்கான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து முன்னணி நடிகைகளில் ஒருவராக தனது இடத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் பயணித்து வருகிறார்.
நடிகையாக தனது வளர்ச்சிக்கு தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளும், அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் உழைப்பும் முக்கியம் என்று கருதும் நிதி அகர்வால், ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்று தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு பணிகளை ஒரே நேரத்தில் சமாளித்து நடித்துக் கொடுத்துள்ளார்.
தனது இலக்குகளை நோக்கி தொடர்ந்து பயணிப்பதே தன்னை உற்சாகப்படுத்துவதாக கூறும் நிதி அகர்வால், இதுகுறித்து பேசும்போது, “எனது இலக்குகள்தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன. இயல்பிலேயே நான் கடினமாக உழைக்கக்கூடியவள். நான் செல்ல விரும்பும் இடத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான மொழிகள், கதைக்களங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பில் புதிய அனுபவங்களை பெறுவதில் நிதி அகர்வால் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, முன்னணி நடிகர்களின் பிரம்மாண்டமான திரைப்படங்களில் கதைக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பதை தவிர்க்க விரும்புகிறார். படத்தின் பிரம்மாண்டத்திற்கு இணையாக கதையின் வலிமையும், கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒரு நடிகையாக தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் மற்றும் வலுவான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் தனக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என நிதி அகர்வால் எதிர்பார்த்து வருகிறார்.
இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என வெவ்வேறு மொழித் திரையுலகில் பணியாற்றிய அனுபவம் தனக்கு பல்வேறு வகையில் உதவியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பவன் கல்யாணுடன் நடித்த ‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் பிரபாஸுடன் நடித்த ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்கள் அவரது திரைப்பயணத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளன.
திரையில் தோன்றுவதற்காக மட்டுமே திரைப்படங்களை தேர்வு செய்யாமல், ரசிகர்களின் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே நிதி அகர்வாலின் தற்போதைய நோக்கமாக உள்ளது. தென்னிந்திய சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி, முன்னணி நடிகைகளில் ஒருவராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து பயணித்து வருகிறார்.