கமல்ஹாசன் வெளியிட்ட தேவி ஸ்ரீ பிரசாத்தின் ‘ஓ பெண்ணே’ தனியிசைப் பாடல்

டி சீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் ‘ஓ பெண்ணே’ தனியிசைப் பாடலை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

இந்தப் பாடல் ஒரு பான்-இந்தியா தனியிசைப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் தமிழ் பதிப்பைத்தான் இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். ஹிந்தி பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டுவிட்டார். தெலுங்கு பதிப்பு நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு வெளியாகி உள்ளது. 

இன்றைய வெளியீட்டு விழாவினில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பேசுகையில்,

“கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்கக் கூடியவராக எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேசப் பாடலின் ஐடியாவை முதன் முதலில் அவரிடம் தான் கூறினேன். அவருடைய உத்வேகம் தான், நான் இந்தப் பாடலை முடிக்கக் காரணமாக இருந்தது. அவருக்கு இசையின் மேல் இருக்கும் பிரியம் தான், என்னையும் அவரையும் ஒன்றிணைத்தது. அதனால் தான் அவர் இதை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன். 

சுயாதீனக் கலைஞர்கள் வெளியே வர வேண்டும் என்பதற்காகத்தான் கொரோனா காலத்தில் ராக்ஸ்டார் என்ற நிகழ்வை நடத்தினேன். இந்தப் பாடலின் நோக்கமே சுயாதீனக் கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் தங்கள் திறமையைக் காட்ட வேண்டும் என்பது தான். இனிமேல் வரும் சுயாதீனக் கலைஞர்களும் பல மொழிகளில் தங்கள் பாடல்களை உருவாக்க வேண்டும். பல மொழிகளை கற்றுக் கொண்டு, பல மொழிகளில் இசையமைக்க வேண்டும். 

இந்த பான் இந்தியன் பாப் ஆல்பத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. சமீபத்தில் ஹிந்தியில் இந்தப் பாடல் வெளியானது, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. டி சீரிஸ் நிறுவனத்திற்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். பூஷன் குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்குத் தேவை, அனைவருக்கும் நன்றி”, என்றார்.

கமல்ஹாசன் பேசுகையில்,

“தேவிஸ்ரீபிரசாத்தை எனக்குப் பல நாட்களாகத் தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்தடுத்து  உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார். அது சிறந்த இசைக் கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும். இவருக்கு வெற்றி தாமதாகிறது எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன். இவருக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாகத் தேவை. 

திரை இசைப் பாடல்களைத் தாண்டி, சுயாதீனப் பாடல்கள் நிறைய வர வேண்டும், இசைக் கலைஞர்கள் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு தான், சுயாதீனஙப பாடல்கள் தான் இசைக் கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிக்காட்ட ஒரு பாதையாக இருக்கும். மற்ற நாடுகளில் திரைப் பிரபலங்களை விட சுயாதீனக் கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள். 

திரைப்படங்களை விட மிகப் பெரிய துறையாக இசைத் துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. அதனால் அதற்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை. பழைய காலத்தில் இது அதிகமாக இருந்தது, இப்போதும் மீண்டும் அது வர வேண்டும். தேவிஸ்ரீபிரசாத்தின் இந்தப் பாடல் பெரும் வெற்றி பெற வேண்டும். தமிழ் சினிமாவிலும் இவர் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். இந்த பாடலுக்கு உறுதுணையாக இருந்த பூஷன் குமாருக்கு நன்றி. இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி," என்றார்.

Read Previous

பிஸ்தா – விமர்சனம்

Read Next

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ – டிரைலர்

Most Popular