லியோ விஷன் மற்றும் சினிமாவாலா பிக்சர்ஸ் தயாரிப்பில் மாரிசன் இயக்கத்தில் ஷபீர் இசையமைப்பில் திலீப் சுப்பராயன், கீதா, ஆகியோருடன் குட்டி நட்சத்திரங்களான பேபி மோனிகா, தீபா, ஜெனிபர், நிஷேஷ், பாலா, தேஜோ, க்ருத்திக், ஆதித்யா, அஜீஸ், ஆதர்ஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘சங்கு சக்கரம்’.
பேய்க் கதை என்றாலே பயமுறுத்தும் பேய்ப் படங்களாக வந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் பேய்களையே இந்த குட்டீஸ்கள் பயமுறுத்தும் கலகலப்பான கதை கொண்ட படம்தான் ‘சங்கு சக்கரம்’.
குழந்தைகள் நடிக்கும் படங்கள் என்றாலேயே குடும்பத்தினர் அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இருக்கும். ‘மை டியர் குட்டிச் சாத்தான், அஞ்சலி’ ஆகிய படங்களுக்குப் பிறகு குழந்தைகளின் குறும்புத் தனங்களுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சங்கு சக்கரம்’ படம் அமைந்துள்ளதாக ரசிகர்களும், விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வாரத்திய அதிக வசூல் படங்களில் டாப் 5 பட்டியலில் ‘சங்கு சக்கரம்’ படம் இடம் பிடித்துள்ளது.
மற்ற படங்களுக்கு மத்தியில் குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் கிடைத்த வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளார்கள்.