‘7 சி’ என்டர்டெயின்மென்ட் மற்றும் அம்மே நாராயணனா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
இப்படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலை விழாவில் நடைபெற உள்ளது.
அத்துடன் அந்த விழாவில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ‘ராம்னாட் ரைனோஸ்’ அணியை இப்படத்தின் தயாரிப்பாளர்கள் வாங்கியுள்ளார்கள்.
அந்த அணிக்கு கேப்டனாக ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் நாயகனான விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு நாயகனான கௌதம் கார்த்திக்கும் அதே அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் அந்த அணியில் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார், ஷாம், பரத், ஆதவ் கண்ணதாசன், போஸ் வெங்கட், வருண் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நட்சத்திர விழாவில் கிரிக்கெட் போட்டிக்கு நடுவில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இசை வெளியீடும் அனைத்து நட்சத்திரங்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நிஹரிகா, காயத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு கிரிக்கெட் அணியை வாங்கியது இந்தியத் திரையுலகத்தில் இதுவே முதல் முறை.