தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும், நாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்தவர் நெப்போலியன். தற்போது ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் நடித்துள்ளார்.
‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தினார்கள். அந்த நிகழ்வில் நெப்போலியன் பேசியவதாது,
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வில்லனாக அறிமுகமானேன். அந்தப் படத்தில் 60 வயது முதியவராக நடித்தேன். அதன் பின் பல படங்களில் வில்லனாக நடித்து கதாநாயகனாகவும் நடித்துள்ளேன்.
அரசியலில் இறங்கி, எம்எல்ஏ, எம்.பி. ஆகி மத்திய அமைச்சராகவும் பணியாற்றினேன். அரசியலை விட்டு விலகி இப்போது முற்றிலுமாக அமெரிக்காவில் செட்டிலாகி விட்டேன்.
இருந்தாலும் தமிழ்ப் படங்களில் மட்டுமல்லாமல், ஆங்கிலப் படங்களிலும் நடித்து வருகிறேன். ‘முத்துராமலிங்கம், சீமராஜா’ படங்களைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறேன். ஹாலிவுட்டில் ‘டெவில்ஸ் நைட், கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன்.
இந்த ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் நடித்த முதல் ஹாலிவுட் படத்தில் ஹீரோயினுடன் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. ஆனால், இந்தப் படத்தில் ஹீரோயினுடன் நடித்துள்ளேன். அடுத்த படத்தில் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சினிமா, அரசியல் இரண்டிலும் நான் ஆசைப்பட்டது நடந்திருக்கிறது. அது போல் ஹாலிவுட்டிலும் ஹீரோவாக வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதுவும் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த். அவர் ‘பிளட் ஸ்டோன்’ என்ற படத்தில் நடித்தார். அவருக்குப் பின் நான்தான் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதைப் பெருமையாகச் சொல்ல முடியும்,” என்றார். நெப்போலியன்.