வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில், விமல், ஓவியா, சரண்யா, இளவரசு மற்றும் பலர் நடிக்கும் படம் களவாணி 2.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றி பேசினர்.
நிகழ்ச்சியில் ஓவியா பேசுகையில்,
“களவாணி எனக்கு மிகவும் நெருக்கமான படம். சற்குணம் சார் தான் எனக்கு ஓவியா என்ற பெயரை வைத்தார். அந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் இங்கு பார்ப்பது மகிழ்ச்சி. எனக்கும் விமலுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட, இளவரசு சார், சரண்யா அம்மாவுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் சிறப்பாக இருக்கும். விமல் என் நெருங்கிய நண்பர், அவர் தான் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். இந்த படமும் களவாணி அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும்,” என்றார்.
இயக்குனர் சற்குணம் பேசும் போது,
“களவாணி படத்தை விட, இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். இது களவாணி படத்தின் முழு தொடர்ச்சி இல்லை. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். விமலின் களவாணி தோற்றத்தை முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்த போதே அந்த நம்பிக்கை வந்தது. ஓவியா மகளிர் குழு தலைவியாக நடித்திருக்கிறார்.
களவாணி 2 படம் பற்றி சொன்னபோதே எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ஓவியா. பயங்கர காய்ச்சல், ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார். சரண்யா மேடம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். இளவரசு சார் படப்பிடிப்பை தாண்டி, என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை அழைத்து பேசுவார். ஆலோசனை வழங்குவார். வில்லன் கதாபாத்திரத்தில் துரை சுதாகர், ஓவியாவின் அப்பாவாக வில்லன் ராஜ், சூரிக்கு பதில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
நடராஜன் சங்கரன், மணி அமுதவன், ரொனால்ட் ரீகன், வி 2 என 4 இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்,” என்றார்.
நடிகை சரண்யா பேசுகையில்,
“களவாணி எனக்கு கிடைத்த ஒரு வாழ்நாள் சாதனை திரைப்படம். அந்தப் படத்தில் வந்த ‘ஆடி போயி, ஆவணி வந்தால்’ வசனம் எனக்கு உலகப் புகழை பெற்றுத் தந்தது. முதல் பாகத்தில் இருந்து இந்த படம் வித்தியாசமாக இருக்கும். புதுக் களத்தில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடிக்கும் போது முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். முதல் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உருவானது. நான் இணைந்து நடித்த நடிகர்களிலேயே இளவரசு சாருடன் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஓவியா ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை ஆகிட்டாங்க, அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.