இசைஞானியின் இசை வசந்தம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

     சைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    ஹங்கேரியிலிருந்து வந்த இசைக் கலைஞர்கள் இசைஞானியின் இசையை இசைக்க அந்த மாலைப்பொழுது ஒரு பொன்வசந்தமாக மாறியது. திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இசைஞானியின் இசையை மற்ற ரசிகர்களைப் போல் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்த காட்சி, இசைஞானியின் இசைத் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் இருந்து சில துளிகள், இதோ…..

 உறவுகள் தொடர்கதை….என்ற இசைஞானியின் இனிமையான பாடலை பாடியபடி மேடையில் தோன்றினார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் ஒரு இயக்குனர், இசை ரசிகர் மட்டுமல்ல இனிமையான பாடகரும் கூட என்பது அன்றுதான் தெரிந்தது.

  ஹங்கேரி இசைக் கலைஞர்கள் இசைஞானியின் சில இனிமையான பாடல்களை பத்து நிமிடங்கள் இசைத்த காட்சி அரங்கினுள் இருந்த அனைவரையும் பரவசப்படுத்தி, மெய் சிலிர்க்க வைத்தது. அரங்கமே எழுந்து நின்று தட்டிய கைதட்டல் ஒலி அடங்க வெகு நேரமாயிற்று.

     கௌதம் வாசுதேவ் மேனன், இசைஞானியிடம் ஒரு சிறு இசை பேட்டி கண்டார். அதாவது கௌதம் அவருக்கு பிடித்த ஐந்து பாடல்களை இசைஞானியை பாட வைத்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.

  பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம் பெற்ற கோடைக் கால காற்றே…, ஆறிலிருந்து அறுபது வரை படத்திலிருந்து கண்மணியே காதல் என்பது….., கடலோரக் கவிதைகள் படத்தின் அடி ஆத்தாடி….., அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து ஒரு பூங்காவனம்….., அவதாரம் படத்திலிருந்து தென்றல் வந்து…..ஆகிய ஐந்து பாடல்களையும் இளையராஜா பாடியும் அந்த பாடல்கள் உருவான விதத்தைப் பற்றியும் கூறினார்.

  நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த அந்த பாடல்களை ஹங்கேரி குழுவினர் இசைக்க, நமது பின்னணி பாடகர்கள் பாட ஆரம்பித்தது ஒரு இனிமையான பரவசம்.

       முதல் பாடலை நடிகர் சந்தானம் அறிமுகப்படுத்தி, அவருக்கு இளையராஜாவின் தெலுங்கு பாடல் ஒன்று காதலுக்கு எவ்வாறு உதவியது என நகைச்சுவையாக கூறினார். அதற்கு ராஜா, பண்றது நீங்க பழி என் மேலயா என பதிலுக்கு நகைச்சுவையாக கூற அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது. நீதானே என் பொன்வசந்தம் படத்தில் இடம் பெற்றுள்ள ‘புடிக்கலை மாமு, படிக்கிற காலேஜ்…. ’ என்ற பாடலை சந்தானம் அறிமுகப்படுத்த, பாடகர் சூரஜ் அந்த பாடலை பாடினார்.

     இரண்டாவது பாடலான ‘காற்றை கொஞ்சம்…’ என்ற பாடலை கௌதம் மேனனின் ஃபேவரிட் ஹீரோவான சூர்யா அறிமுகப்படுத்த பாடகர் கார்த்திக் பாடினார். சூர்யா பேசும் போது, பள்ளியில் படித்த போது இளையராஜாவின் பாடல்களை அதிகம் ரசித்ததை நினைவு கூர்ந்தார்.

     அடுத்த பாடலான ‘முதல் முறை…..’ பாடலை இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள நா.முத்துக்குமார் அறிமுகப்படுத்தினார். இசைஞானியின் இசையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியதற்கு இயக்குனர் கௌதம் மேனனுக்கும், ஜுலி கணபதி படத்தின் மூலம் இசைஞானியின் இசையில் முதல் பாடல் எழுத காரணமாக இருந்து அவருடைய குரு இயக்குனர் பாலுமகேந்திராவுக்கும் நன்றி கூறினார். இப்பாடலை சுனிதா சாரதி பாடினார்.

     நான்காவது பாடலாக, டிரைலராக வெளியான போதே இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ‘சாய்ந்து சாய்ந்து….’ பாடலை யுவன் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே.வின் பேத்தி ரம்யா ஆகியோர் பாடினார்கள்.

     இதற்கடுத்து ஒரு சிறிய இடைவெளியில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பாடகர் கார்த்திக்குடனும், கிடார் பிளேயர் ஒருவருடனும், விழாவுக்கு வந்துள்ள பிரபல இயக்குனர்களிடம் இசைஞானியைப் பற்றிய அனுபவங்களைக் கேட்டு, அவர்களுக்கு பிடித்தமான பாடலை பாடகர் கார்த்திக் மூலம் பாட வைத்தார்.

     முதலில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், அவர் பேசுகையில் இளையராஜா கோலோச்சிய 80கள்தான் தமிழ் திரையுலக இசையின் பொற்காலம் என்று குறிப்பிட்டார். எண்ணற்ற பாடல்களை ஹிட்டாக்கி சாதனை படைத்தவர் இளையராஜா என்றும், இந்த ஆண்டின் தேசிய விருதுக்கு இளையராஜாவும், கௌதம் மேனனும் பொருத்தமானவர்கள் என்றார். 80களின் இசை மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என்ற அவருடைய ஆவலை வெளிப்படுத்தினார்.

     இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், இளையராஜா ஒரு சுயம்பு, அவராகவே அனைத்து விதமான இசைகளையும் கற்றுக் கொண்டு, இன்று வெளிநாட்டினரை அழைத்து வந்து இசையமைக்க வைத்த்து வரை அவருடைய திறமைகளைப் பற்றி பேச நாட்கள் போதாது என்றார். காதல் ஓவியம் படத்திற்கு வெறும் ராதாவின் கண்ணசைவிற்கு இளையராஜா பொருத்தமாக இசையமைத்ததை நாமும் நேரில் படத்தைப் பார்ப்பது போன்று வர்ணித்தார்.

     இயக்குனர் பாலுமகேந்திரா பேசுகையில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜாவுடன் பணி புரிவதாகவும், முதல் இரண்டு படங்களைத் தவிர, இதுவரை தான் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் இசை இளையராஜாதான் என்றும், இனி இயக்கப் போகும் படங்களுக்கும் இசை இளையராஜாதான் என்றும் அவருக்குடனான உறவை உணர்வுபூர்வமாக விளக்கினார்.

     இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜாதன் இசைஞானி ஏற்கெனவே போட்டு வைத்திருந்த 7 பாடல்களை வைத்து உருவாக்கப்பட்ட கதைதான் வைதேகி காத்திருந்தாள் என்றும், இயக்குனர் பி.வாசு, சின்ன தம்பி படத்திற்காக வெறும் அரை மணி நேரத்திலேயே அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் பதிவு செய்து கொடுத்தார் என்றும், ஆர்.கே.செல்வமணி பேசும் போது இசைஞானி ஒரு அன்பான இசை சர்வாதிகாரி என்றும், ஆர்.வி.உதயகுமார், மற்றவர்கள் வேண்டாமென்பதை தான் எடுத்து அந்த பாடலை படங்களில் பயன்படுத்தி ஹிட்டானதைப் பற்றியும் பெருமையாகப் பேசினார்கள்.

     இதன் பின்னர் இப்பத்தின் ஐந்தாவது பாடலான ‘சற்றுமுன் பார்த்து…பாடலை, படத்தின் நாயகி சமந்தா, அறிமுகப்படுத்த ரம்யா பாடினார்.

     ‘பெண்கள் என்றால்….என்ற ஆறாவது பாடலை படத்தின் நாயகன் ஜீவா அறிமுகப்படுத்த யுவன்ஷங்கர் ராஜா பாடினார்.

     ‘என்னோடு வா ……என்ற ஏழாவது பாடலை கார்த்திக் பாடினார்.

     இதற்கடுத்து படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இயக்குனர் கே.பாலசந்தர் வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார்.  படத்தின் தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராம், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஜீவா, சமந்தா ஆகியோரும் உடனிருந்தனர்.

     நிகழ்ச்சியின் கடைசியாக இசைஞானி இளையராஜா, பேலா ஷென்டேயுடன்  பாடிய ‘வானம் மெல்ல….என்ற பாடலை பாடினார்.

     விழாவில் , இயக்குனர்கள் சந்தானபாரதி, கஸ்தூரிராஜா,  சுரேஷ் கிருஷ்ணா, லிங்குசாமி, தரணி, சமுத்திரக்கனி, சசி, வெற்றிமாறன், ‘ஜெயம்’ ராஜா, பிரபு சாலமன், ரவி கே.சந்திரன், கே.வி.ஆனந்த்,கற்றது தமிழ் ராம், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு,ஆர்.பி.சௌத்ரி, டி.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

     நடிகர் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு,  நடிகைகள் வசுந்தரா, ரூபா மஞ்சரி, ஆகியோரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் நாயகன் நானி- யும் கலந்து கொண்டார்.

     கார்த்திக்ராஜா, பவதாரிணி, இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகிய இளையராஜாவின் குடும்ப உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

     இந்த ஆண்டின் ஈடு இணையற்ற திரை இசைக்காவியமாக இப்படம் அமையப் போவது உறுதி என்பது அனைத்துப் பாடல்களையும் கேட்கும் போதே தெரிந்து விட்டது. ராஜா ராஜதான், என்றென்றும் இளையராஜாதான் என ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறும் போது பேசிக் கொண்டதே இதற்கு சாட்சி.

     இப்படத்தின் ஒரு பாடல், ‘என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன், உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் ’ என்று ஆரம்பிக்கும். ராஜாவின் ரசிகர்கள் மட்டுமல்ல, உண்மையான இசையின் ரசிகர்கள் ராஜாவை விட்டு வேறு எங்கும் போக மாட்டார்கள்.

Read Previous

விரைவில் பாகன்…

Read Next

பதவி எனக்கு ரீ என்ட்ரி – சாய்குமார்

Most Popular