தாண்டவம் ‘கதை’ – இயக்குனர் விஜய்

     தாண்டவம் படத்தின் கதையைப் பற்றி திரையுலகத்தில் பரபரப்பான பிரச்சனை நடந்து வருவதாக சொல்லப்படும் சூழ்நிலையில் , இப்படத்தின் கதைக்கும்,  விக்ரம் கதாபாத்திரத்திற்கு முன்னுதாரணமாகவும்,  இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி டேனியல் கிஷ் என்பவரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டேனியல் கிஷ்-ன் திறமைகளையும் , கண் பார்வை இல்லையென்றாலும் அவர் எப்படி அனைத்தையும் பார்க்கிறார் என்பதையும் படத்தின் இயக்குனர் விஜய் விளக்கிச் சொன்னார். இப்படத்தின் கதையைப் பற்றி அவர் மேலும் கூறுகையில்,

“தெய்வத்திருமகள் படம் ஷுட்டிங் நடந்துட்டிருக்கும் போதே, அடுத்ததா ஒரு கண் பார்வையற்ற மனிதரைப் பற்றி ஒரு படம் பண்ணலாம்னு எனக்கு தோணுச்சி. இதைப் பத்தி விக்ரம் கிட்டயும் சொன்னன், படத்தோட ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா கிட்டயும் சொன்னன்.

விக்ரம் ஒரு திறமையான நடிகர். தெய்வத்திருமகள் படத்துலயே கைகளை கூட நடிக்க வைக்கிறதுக்காக சிறப்பான முயற்சிகளை எடுத்து நடிச்சிக் காட்டினவரு. அவருக்கு நான் சொன்ன நாட் ரொம்ப பிடிச்சிருந்தது.

நீரவ் ஷா கிட்ட சொன்ன போது, அவர் உடனே இன்டர்நெட்ல இத மாதிரி டேனியல் கிஷ் னு ஒரு கண்பார்வையற்றவர் அமெரிக்காவுல இருக்கிரு. பார்வை இல்லன்னாலும், அவர் அந்த குறையே இல்லாம பல வேலைகளை செய்வாருன்னும் சொல்லி அந்த வீடியோவை எங்களுக்கு காட்டினாரு.

எனக்கு அவர் மேல ரொம்ப ஆர்வம் வந்து அவரை எப்படியாவது சந்திக்கணும்னு முடிவு பண்ணன். ஆனால், அவர் அமெரிக்காவுல இருக்காருன்னு மட்டும்தான் தெரியும். எந்த ஊர்ல இருக்காருன்னு கூட தெரியாது.

அப்புறமா, இங்க எனக்குத் தெரிஞ்வங்க ஜெயஸ்ரீன்னு பேரு, ஒரு சமூக நல அமைப்பு நடத்திட்டிருக்கிறவங்க கிட்ட இதப் பத்தி யதேச்சையா பேசினேன். அவங்களுக்கு டேனியல் கிஷ் படத்தி தெரிஞ்சிருந்தது. உடனே அவர் கிட்ட தொடர்பு கொண்டு என்னைப் பத்தி சொன்னாங்க. அப்புறமா நானும் அமெரிக்கா கிளம்பிப் போயி அவரைச் சந்திச்சி, அவர் கூடவே ரெண்டு நாள் தங்கியிருந்து அவரை பத்தின பல விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன்.

இப்படி ஒரு திறமைசாலியா இருந்துக்கிட்டிருக்கிறவரை மையமா வச்சி, அவரோட திறமைகளை அடிப்படையா வச்சிதான் இந்த தாண்டவம் படத்தோட கதைய உருவாக்கினேன்.

அவரை மையமா வச்சி விக்ரமோட கதாபாத்திரத்தையும், அவரோட திறமை படத்துல எப்படிலாம் பயன்படுத்தலாம்கறதையும் முடிவு பண்ணன். அது மட்டுமில்ல டேனியல் கிஷ் , தாண்டவம் படத்துலயும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு”.

இதுதான் தாண்டவம் படத்தின் கதை உருவான விதம் என பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார் இயக்குனர் விஜய்.

தொடர்ந்து, படத்தின் நாயகன் விக்ரம் தாண்டவம் படத்தைப் பற்றி பேசிய பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் கிஷ் அவரைப் பற்றியும் அவர் கண்பார்வையற்றவர்களுக்காக செய்து கொண்டிருக்கும் தொண்டுகளைப் பற்றியும் விவரமாகக் கூறினார்.

முன்னதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் வரவேற்புரை ஆற்றினார்.

 முதலில், படத்தின் டிரைலரையும் மூன்று பாடல்களையும் பத்திரிகையாளர்களுக்கு காட்டுவதாகச் சொல்லி விட்டு, டிரைலரையும் ஒரு பாடலையும் மட்டுமே காட்டினார்கள்.

பின்னர் டேனியல் கிஷ் பற்றிய வீடியோவையும் காட்டினார்கள், அதையும் பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள்.

ஏன் என்ற காரணம் தெரியவில்லை ?

 

 

Read Previous

கோடம்பாக்கம் To உலக சினிமா – பாலுமகேந்திரா பேச்சு

Read Next

புனாவில் ‘10000 கோடி’